Wednesday, November 28, 2012

பயணங்கள் முடிவதில்லை



பயணங்கள் முடிவதில்லை

களவு போன பிறகும் காதல்
நிலவு சுடுவதில்லை
கனவு முடிந்த பிறகும் நெஞ்சின்
நினைவு விடுவதில்லை
வெண்மேகம் விலகிப் போனாலும்
நீலவானம் நீங்கிப் போவதில்லை

இந்த உலகில் என்றும்
பாதைகள் முடிந்த பிறகும்
பயணங்கள் முடிவதில்லை...

Saturday, November 24, 2012

விடுதலை











ஜோசியத்தில் என்றுமே
நம்பிக்கை இருந்ததில்லை எனக்கு
இருந்தாலும் தினந்தோறும்
தவறாமல் பார்ப்பேன்
என் வாழ்வின் விடியலை
அறிவதற்காக அல்ல...
அடைப்பட்ட அந்தக் கிளியின்
ஐந்து நிமிட விடுதலைக்காக..


Thursday, November 22, 2012

தேவதை கதைகள்






தேவதை கதைகள் 

தேவதைகள் கதை கேட்குமா?
இங்கே பாருங்கள்...
மண் தேவதைகள் 
விண் தேவதையிடம் 
கதை கேட்கின்றன...

Wednesday, November 21, 2012

கண்ணீர் மொழி

                                                          
                                                                     கண்ணீர் மொழி




அரும்பும் போதே சுரக்கும் கண்ணீர்
உப்பைத் தன்னுள் சுமக்கும்
தவிக்கும் போதும் உள்ளே
துடிக்கும் இதயம்
காயத்தைத் தன்னுள் சுமக்கும்

கொட்டித் தீர்த்தப் பின்புதானே
தெளிவாகும்
கருமேகம் சூழ்ந்த நீலவானம்
கண்ணீர் விட்டுத் தீர்த்தப் பின்புதானே
லேசாகும்
கனமான சோக இதயம்

கண்ணீர்....
அழகான உணர்வுகளின் ஆழமான பரிசு!
அது கூறும் கதைகள்
வார்த்தை வரையறைகளுக்குள் வராது
கேட்கும் காதுகளுக்கு எட்டாது

கண்ணீர்.....
விழித்தடாகங்களில் பூக்கும் நீர்மொட்டு!
கண்கள் எழுதும் கருணைக் கடிதம் !
இதயத்தில் ஜனிக்கும் ஜீவ ஊற்று !
மனம் பாடும் மௌனப் பாட்டு !

பலநேரம் பலருக்காக நீ சிந்தும்
புன்னகைத்தேன் கூட பொய்யாக கசக்கலாம்
ஆனால் உள்ளத்தில் ஊறிய
உண்மை உணர்வுக்காக உன்
விழியில் வழியும் கண்ணீரும் இனிப்பாகும்

உனக்கு புன்னகையைப் பரிசளிக்க
ஆயிரம் பேர் கூடலாம்
ஆனால் கண்ணில் பெருகும்
கண்ணீரைத் துடைக்க ஓடிவரும்
அன்பு விரல்கள் கிடைப்பது அரிது

ஆழமாய் அறிந்து கொண்ட அன்பு
உன் கண்ணீரை விலை பேசாது
முழுமையாய் மனதைப் புரிந்து கொண்ட உறவு
கண்ணீரே சூழ விடாது

கண்ணீர்....
கண்கள் கொட்டும் வைரங்கள் !
அதை அதன் மதிப்பை நன்கு
உணர்ந்தவர்களுக்கு பரிசாக அளியுங்கள் !

கண்ணீர் காயும் முன்னே காயம் ஆறுமா?
மனதில் முள்ளான காயம் மாயம் ஆகுமா?
வினா தொடுத்தேன் என்னுள்
விடையாய் வழிந்தது
மீண்டும் என் விழிகளில்
கண்ணீர்!!!

Tuesday, November 13, 2012

உயிர் எழுத்து


                                                                    உயிர் எழுத்து









ஆண்டவனின் அச்சகத்தில் 
அழகாய்க் கோர்க்கப்பட்ட 
ஓர் புதிய 
உயிர் எழுத்து!

வரம் வேண்டும் யாசகன் 
கைவந்து தவழும் 
மடி வந்து மகிழும் 
அட்சயபாத்திரம்!

இரு அன்புக் கவிதைகள் 
இணைந்து எழுதும் 
ஓர் உயிர்ப் புத்தகம்!
 
                                          குழந்தை!!!                                           

Thursday, November 8, 2012

போராட்டம் ஒரு தேரோட்டம்


 போராட்டம் ஒரு தேரோட்டம் 






புயலாகும் போராட்டம்
உருண்டோடும் வாழ்வின்
ஒவ்வொரு பக்கங்களிலும் படிந்தோடுகிறது
புரண்டோடும் அதைப்
புரட்டிப் பார்ப்பதும் புரட்டிப் போடுவதும்
நம் கையில் உள்ளது

நினைவோடும் மனதில் போராட்டம்
வேரோடிய போதிலும்
நனைக்கும் அதன் கால்களை
நம்பிக்கை நீரோடிவிட்டால்
புண்ணாய்ப் புரையோடிப்போன காயங்களும்
மாயமாய் மறைந்தோடிப் போகும்

துணிவோடு  எதையும் போராடிப் பார்க்கும் மனம்
பணிவோடு பெற்று விட்டால்
வஞ்சமாடும் போர்களமும் பூக்களம் ஆகும்
வன்மமாடும் முட்காடும் மலர்வனமாகும்

துவண்டோடும் துன்ப ஆழ்கடலின் அமைதியானாலும்
துள்ளியோடும் இன்பக் கரையோர அலையானாலும்
கனிவோடு கலங்காமல் ஏற்கும் - அவ்விரண்டும் ஒன்றென
சிறப்போடு சீர்தூக்கிப் பார்க்கும்
சலனமில்லா மனது

பழகிப் போனால்
அனலாய்த் தீண்டும் போராட்டமும்
திருவிழாத் தேரோட்டமாகும் - ஏனெனில் நாம்
இன்பத்தை வடம் போலே இழுக்கத் தேவையில்லை
துன்பத்தை விடம் போலே பருகத் தேவையில்லை
அலங்காரத் தேரில் ஆனந்தமாய்
பவனி வரும் உற்சவர் போலே
வலிகளை வரவேற்று
துக்கங்களைத் தூக்கியெறிந்து
உற்சாகமாய் வலம் வருவோம்
வாழ்க்கை என்னும் வீதியிலே...


Friday, November 2, 2012

தாயைத் தேடி


 தாயைத் தேடி  



உடல்மூடிய ஓடு உடைத்து
உயிர்வாங்கி உலகிற்கு நான்
ஓடோடி வந்த நொடி முதலாய்
ஓயாமல் தேடி அலைகிறேன்
உயிர்காத்த என் தாயின் தடயங்களை
உடன்பிறந்தெனைப் பிரிந்த
சுற்றங்களின் சுவடுகளை...

கடமை முடிந்ததென அவள் கைவிட்டுப் போனாளோ
துணிவிருந்தால் திரும்பட்டும் என்று தடுமாறிப் போனாளோ
தெரியாமல் தவிக்கிறேன்...

கருவறை பிரித்ததோ  - எங்களை
கடற்கரை பிரித்ததோ என்
கண்விழி திறந்தது முதல்
காணாமல் துடிக்கிறேன்
கிடைக்கவில்லை அவர்கள் இதுவரை... 

ஆழித்தாயே ! உன் அகன்ற அன்பு அலைகளால்
இந்த அனாதையை அணைத்துக் கொள் !
மூச்சறுந்து மரிக்கும் முன்னே என்னைப்
புனல் மடியில் ஏந்திக் கொள் !
வாழ்விழந்துப் போகுமுன்னே
கடல்வாசல் சேர்த்துக் கொள் !
விதிவசத்தால் வழிமாறும்முன்னே
ஆதரவாய்த் தழுவிக் கொள் !

புரியாத என் பூர்வீகம் தேடி வருகிறேன்
புதுவாழ்வு நீ அளிப்பாய் என்ற நம்பிக்கையில் !