என் மனதோரம் ஒரு மழைக்காலம்
(எனது ஆட்டோகிராப் உங்கள் பார்வைக்கு)
சிறு குச்சி கையிலெடுத்து
சிறு பள்ளம் தோண்டி
மண் அகழ்ந்து ஈரப்படுத்தி
விதைபோட்டு வளர்த்த செடியில்
ஆசையாய் மொட்டு விரித்து
இதழ் குவித்து சிரிக்கும் அந்த
முதல் பூ பறித்தது வாசமாய்
ஞாபகம்....
சூரியன் மயங்கி மறையும்
மாலை மேற்கு செவ்வானத்தில்
நாளெல்லாம் இரைத் தேடிக் களைத்து
அசதியில் கூட்டமாய்க் கூடு திரும்பும்
தூரத்துப் பறவைகளின்அழகிய
வளைந்த வில் போன்ற அந்த
அணிவகுப்புகள் பார்த்தது அழகாய்
ஞாபகம்...
ஜன்னலோர ரயில் பயணத்தில்
கம்பிகளின் ஓரம் நின்று ஊஞ்சலாடும்
பட்டுக் கன்னங்களில் பட்டுத் தெறிக்கும்
சில்லென்ற அந்த மழைச்சாரல் சிலிர்ப்புகள் மனதோடு
ஞாபகம்...
சின்ன சின்னதாய் துளி உடைந்து
பூவாளி நீராய் சிந்தித் தெளிக்கும்
புயல் நேரத்து ஊசித் தூரலில்
இளஞ்சூட்டுடன் ஆவி பறக்கும்
இதமாகவே இதழ் பருகும்
அந்த சாலையோர சிறிய கடையின்
தேநீர் இதமாய்
ஞாபகம்...
யாருக்குமே தெரியாமல் மறைத்து
ரகசியமாய்ப் புத்தகத்தின் நடுவில்
பொக்கிஷமாய்ப் புதைத்துப் பாதுகாத்து
என்றாவது குட்டி போடும் என்ற நம்பிக்கையில்
பார்த்துப் பார்த்து மூடி வைத்திருந்த
அந்த ஒற்றைக் கீற்று மயிலிறகு மென்மையாய்
ஞாபகம்...
அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் காசுகளை
அடைக்கோழியைப் போல் மூடி வைக்க
சிக்கனமாய் அவற்றைச் சேர்த்து வைக்க
அப்பா கடைவீதியில் வாங்கி வந்த அந்த
மஞ்சள் நிற மாங்கனி மண் உண்டியல் மறக்காமல்
ஞாபகம்...
தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு வந்த
தொடுவானம் வரை நீளும் நீலக்கடலை
முதன்முதலாய் நேரில் கண்கள் விரியக் கண்டு
ஆனந்தத்தின் எல்லையில் உறைந்து போய்
மணல் பாய்விரித்தோடும் கடற்கரையில் நின்றபோது
வேகமாய் ஓடிவந்து கால்களை முத்தமிட்டு
நனைத்துப் போன
அந்த வெண்நுரை அலைகள் சிலிர்ப்போடு
ஞாபகம்....
ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும்
தெருவெங்கும் அழகிய தோரணங்களாய்
திருவிழாக் கோலம் சிறப்பாய்ப் பூண்டு
சரக்கொன்றைப் பூக்களாய் சரம்சரமாய்த் தொங்கும்
பின்னிய பச்சை இளங்குருத்து தென்னங் கீற்றுகளும்
காற்றோடு படபடப்பாய்க் கதைகள் பேசும்
அந்த வண்ண வண்ணக் காகிதங்களும்
எழிலோடு
ஞாபகம்...
முதன்முதலில் பள்ளியில் பயத்தோடு மேடையேறி
உள் நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
திக்கித் திணறி மூச்சு வாங்கி
பேச்சு மறந்து
எச்சில் காய்ந்து தொண்டை அடைத்து
பதற்றத்துடன் பேசிய பேச்சுப் போட்டியில் எதிர்பாராமல்
பரிசாய்க் கிடைத்த அந்த பச்சைப் பேனா பசுமையாய்
ஞாபகம்...
கரிக்கும் உப்பைத் தன்னுள்ளே சுமக்கும்
கனமான வெள்ளைப் பீங்கான் குடுவையை
அம்மா எடுத்து வரச் சொல்லிய போது
கைத்தவறிக் கீழே விழுந்து உடைந்து போனதால்
பலமாய் என் முதுகில் பதிந்துப் போன
அப்பாவின் அந்த அழுத்தமான
வலதுகை ஐந்து விரல்கள் அழுத்தமாய் பயத்தோடு
ஞாபகம்...
புதுமணல் வாங்கி வீடு கட்டியபோது
அம்மாவின் கடுமையான திட்டுகளை
அன்பளிப்பாய் வாங்கிக் கொண்டு
கேட்காமலே வருகின்ற வசைமாரிகளை
இலவச இணைப்பாய் பெற்றுக் கொண்டு
ஈர மணலில் கால்களைப் புதைத்து கொண்டு
குழிவீடு கட்டி விளையாடிய நேரங்கள் ஈரத்தோடு
ஞாபகம்...
கடுமையாக உடல்அனலாகக் கொதிக்கின்ற
கோடை சாலையாய் குளிர்க்காய்ச்சல் இரவில்
ஊசிகுத்தி வந்து எழுவதற்கு பலமின்றி
போர்வை இழுத்து படுத்திருந்த வேளையில்
அம்மாவின் கையால் குழைத்துப் பிசைந்து
அன்போடு ஊட்டிக் கொண்ட அந்த
அமுதப் பால்சோறு ஆத்மார்த்தமாய்
ஞாபகம்...
திருவிழாக் கூட்டத்தில் கண்களைப் பறிக்கும்
வண்ண ஊதிகளை ஆசையோடு வாங்கி
கூட்ட நெரிசலில் சிக்காமல் கவனமாய்க் கைப்பிடித்து
உடையாமல் பத்திரமாய்ப் பாதுகாத்து
உடன் வீடு வந்து சேர்ந்த பின்னே
தரையில் பட்ட அந்த நொடியில்
சுக்குநூறாய் வெடித்துச் சிதறிய துண்டுகள் ஏமாற்றமாய்
ஞாபகம்...
சிறுவயதில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு
குடும்பத்தோடு சென்று சாமி கும்பிட்டு
அங்கே தும்பிக்கை நீட்டும் யானையிடம்
காசு கொடுத்து ஆசி வாங்க நான்
மருகி மருகி மிரண்டுப் போய் நின்ற
அந்த நொடிகள் நீங்காமல்
ஞாபகம்...
முதன்முதலாய் நான் முயற்சித்துப் பார்த்து
வண்ணக்குச்சிகளைக் கொண்டு வண்ணம் தீட்டி
அழகாய் புல்வெளி ஒன்றில் நின்று கொண்டு
மருண்ட விழி மலர்ந்து பார்த்திருக்கும் நான் வரைந்த
மான்குட்டி ஓவியத்தைப் பார்த்த மகிழ்ச்சியில்
மனசெல்லாம் பூக்கும் மத்தாப்பைப் போல பூரித்து
மிகுந்த செல்வச் செழிப்போடு மா நிலம் ஆளும்
ஒரு மொகலாயச் சக்கரவர்த்திக்கு அடிதொழும்
அவனது மாண்புமிகு மந்திரிகள் அருகினில் வந்து
புறங்கையை நீட்டச்சொல்லி முத்தமிடல் போல
வரைந்த இப்பிஞ்சுக் கைகளுக்கு கொடுத்த பெரும் பரிசாய்
என் வலதுபுறங்கை பூவிதழ் பதித்த
அம்மாவின் அந்த அன்பு முத்தம் அடிநெஞ்சில் அற்புதமாய்
ஞாபகம்...
இளவெயிலும், மழைதூரலும் ஜோடிக்கிளியென
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுகின்ற அந்த
பொன் அந்தி மாலை
வேளைதனில்
வானுக்கும் பூமிக்கும் வட்டமாய்ப் பாலமிடும்
வானவில்லைப் பார்த்து பரவசித்து
அனைவரையும் ஓடிவர அவசரமாய்
பார்த்து ரசித்திட விரைந்து வருமாறு
கத்திக்கத்தி அழைத்த அந்த
காட்டுக்கத்தல் சத்தமாய்
ஞாபகம்...
பள்ளி இறுதியாண்டில் ஓர்நாள்
மருத்துவமனை ஊர்தியொன்று
வேகமாய் மைதானம் வந்து நிற்பது கண்டு
பரிசோதிக்க வந்திருந்த மருத்துவர்களின் ஊசிக்குப் பயந்து
யாருமே கண்டுபிடிக்க முடியா வண்ணம்
மேசைகளின் மூலைகளிலும்
நாற்காலிகளின் காலடிகளிலும்
அகதிகளாய் ஒளிந்து தஞ்சமடைந்த அந்த
தருணம் தவிப்பாய்
ஞாபகம்...
மாலையில் மொட்டை மாடியில் தலைக்கு மேலே
அழகாய்ப் படபடக்கும் சின்னஞ்சிறு சிட்டுகளைக் கண்டு
" ஆத்துல கல் போடு , என் மேல பூ போடு " என்று
நகங்களில் நித்தம் தோன்றிடும்
சின்ன சின்ன வெள்ளைப் புள்ளிகளுக்காய்
கைகளைத் தேய்த்து களி(ழி)த்த அந்த
கணம் கனிவுடனே
ஞாபகம்...
சிறுவயது ரயில் பயணத்தின் போது
நாங்கள் அமர்ந்திருக்கும் ரயிலை
மற்றொரு ரயில் மின்னல் வேகத்தில்
கடந்திடும் போது இந்த ரயிலும் கூடவே நகர்கிறதோ
என்ற புதிரோடு நகர்ந்த அந்த
குறு நேர மனக்குழப்பம் பதட்டமாய்
ஞாபகம்...
திறந்த புத்தகமாய் தெவிட்டாமல் பேசும்
தெளிவான உள்ளத்துடன் எங்களுடன்
சகலத்தையும் சலிக்காமல் பகிர்ந்துப் பழகும்
அருமைப் பள்ளி நண்பன் தன்னுடைய
கல்விச் சுற்றுலா பயணம் சென்று
உயிர்பிரிந்து பிணமாகத் திரும்பிய அந்த
பொழுது
உயிரோடு உறைந்த
ஞாபகம்...
எங்கள் பள்ளி விளையாட்டு விழாவில்
எங்கள் அன்பு ஆசிரியர்கள் ஓர் அணியும்
பயிலும் மாணவர்கள் ஓர் அணியும்
திரண்டு நின்று மற்ற மாணவர்கள் அனைவரும்
சுற்றி நின்று
கைத்தட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து
குதூகலமாய்க் குதித்து குதித்து விளையாடிய
என்றும் உள்ளம் துள்ளும் அந்த
கைபந்து விளையாட்டு வேடிக்கையாய்
ஞாபகம்...
யாருமில்லாத தனிமைப் பொழுதுகளில்
நீங்காத ரீங்காரமாய் சுற்றிச் சுற்றி
நெஞ்சத்தாமரையை வட்டமிடும் பொன்வண்டாய்
திரும்ப திரும்ப பசுவென அசைபோடும்
மௌனக்குரலில் மனம் பாடும்
உள்ளம் கவர்ந்த அந்த மெல்லிசைப் பாடல்கள் நிறைவாக
ஞாபகம்...
என் பள்ளி மைதானம் முழுவதும்
காலைப் பனியில் பூத்திருக்கும் தும்பைப் பூக்களாய்
சீருடையில் மாணவர்கள் நின்று நிறைந்திருக்க
எங்கள் உடற்கல்வி ஆசிரியை
உரக்க ஒலிக்கும் ஒற்றை மேளம் முழங்க
தனித்தீவில் அகப்பட்ட தனி ஆளாய் மேடை நின்று
உடற்பயிற்சி செய்து காட்டி நான் சொல்லிக் கொடுத்த
உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாக உவகை அளித்த
அந்த இனிய நாட்கள் இனிப்பாய்
ஞாபகம்...
முதுநிலை கல்லூரி இன்பச் சுற்றுலாவில்
குளிர்பனி கொட்டும் கொடை மலை உச்சியில்
ஒற்றை வெண் பௌர்ணமி நிலவை மட்டும்
தலைக்கு மேலே துணையாய்க் கொண்டு
இருள் சூழ்ந்த அடர் காட்டுப் பகுதியில்
நண்பர்களுடன் கைக்கோர்த்து கொண்டு
மூச்சு வாங்க மலையேறிச் சென்று
திகிலுடனே தரிசனம் செய்த அந்த
குறிஞ்சி ஆண்டவர் கோயில் பயணம் பக்தியோடு
ஞாபகம்...
கல்வியியல் கல்லூரியில் தினமும்
தெளிவாய் அழித்து கரும்பலகையின் உச்சியில்
வெண் சுண்ணங்கட்டியில் நாள்தோறும் நான் எழுதும்
புதிய புதிய சிந்தனைச் சுடர்களுக்காக
விழிமலர்ந்து ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்
என் அருமைத் தோழர்களும், தோழிகளும் காத்திருக்கும்
அந்த காலைப் பொழுதுகள் புத்துணர்வாய்
ஞாபகம்...
கல்வியியல் கல்லூரிக் களப்பயணத்தில்
சர்க்கரை ஆலைக்கு சுற்றிப் பார்க்கச் சென்று
திரும்பத் திரும்ப வயிறு நிரம்ப இலவசமாக
கரும்புச் சாற்றை அளவின்றிப் பருகிவிட்டு
திரும்புகையில் கரும்புகளை கைக்கொள்ளாது
அள்ளி அள்ளி பேருந்தில் நிரப்பிக் கொண்டு
தலைசுற்றி மயங்கி மயங்கி விழுந்து
மினுமினுக்கும் மின்மினிப்பூச்சிகள் சில
தலைசுற்றிப் பறந்த அந்த இதமான
இம்சைப் பொழுது தித்திப்பாய்
ஞாபகம்...
கல்வியியல் கல்லூரியில் இடைவேளையில்
சுகமான இளந்தென்றல் உடல் தழுவ
காற்றோடு சலசலத்து வயலோடு ஓடி விளையாடும்
வெள்ளி நீரோடை வாய்க்காலின் அருகில்
பெரிய தனது கிளைகளை நிழல்குடையென விரிக்கும்
அடிபருத்து நிற்கும் புளியமரத்தின் அடியில்
நண்பர்கள் கூட்டமாய் அமர்ந்து கொண்டு
சகலத்தையும் மிக சௌகரியமாய்ப் பேசிச் சிரித்து
ஒன்றாய்க் கூடிப் பசி மறந்து பாசத்துடன்
உணவுகளைப் பகிர்ந்துண்ட அந்த
மனம் மகிழும் மதியப் பொழுதுகள் மகிழ்வாய்
ஞாபகம்...
இன்னும் இன்னும் வாழ்க்கைச் சாலையில்
நினைவு மைல்கற்கள் நீண்டு கொண்டே செல்கிறது...
பயணங்கள் தொடரும் வரை அது தருகின்ற
ஞாபகங்களும் ஓயாமல் அலையடித்துக் கொண்டே இருக்கிறது...
காலத்தின் கரையில் பதித்து நடந்த கணங்களும்
நெஞ்சோடு நீங்காமல் சுவடு பதித்துக் கொண்டே இருக்கிறது...
நினைவுகள் நிச்சயம் நீளும்
வாழ்க்கை இன்னும் நீளம்....