அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
உண்மையாக யார் இந்தியர் ?
எது உண்மை சுதந்திரம் ?
இந்தியாவில் வாழ்பவரெல்லாம்
இந்தியர் அல்லர்
எவருக்குள் இந்தியா வாழ்கிறதோ
அவரே உண்மையான இந்தியர் - இது
என்றோ ஒரு முகம் அறியாத கவிஞனின்
வார்த்தைகள் வரிகளாக வாசித்தது...
நமக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
தாளாத இன்னல்களை அடைந்து
சொல்லி மாளாத கொடுமைகளைச் சுமந்து
விட்டால் மீளாத இன்னுயிர்களையும், உதிரங்களையும்
கொட்டிக் கொடுத்து விட்ட உயிர்களுக்கு
சன்மானமாகக் கிடைத்ததே சுதந்திரம்
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தான்
இன்று எவ்வளவு தந்திரம் - பெயர் சுதந்திரம்
எட்டி உதைத்தாலும் பெற்றவனுக்குத் தான் தெரியும்
பாசப் பிள்ளையின் அருமை
முட்டி மோதினாலும் முயன்று பெற்றவனுக்குத் தான் தெரியும்
பெற்ற பொருளின் அருமை
வெட்டி மாண்டாலும் அரும்பாடுபட்டவனுக்குத் தான் தெரியும்
பெற்ற விடுதலையின் அருமை
இந்த பாரில் பார் (Bar), தம் (புகை) தேடி அலையும்
எனதருமை இளைஞனே...
என்று நீ உண்மையாய் "பாரதம்" தேடி அலைவாயோ?
ஆனால் இன்று பெற்ற சுதந்திரம் எங்கு எப்படி
வாழ்கிறது என்று ஒரு பார்வை...
ஐந்திலேயே அதிகமாய் வளைய வைக்கும்
புத்தக மலைகளை முதுகில் சுமந்து கொண்டு
பிள்ளைகள் பள்ளிக்குப் போய் படித்துவிட்டு
பத்திரமாய் வீடு திரும்பும் வரை பாதி உயிரை
கையில் பிடித்து காத்திருக்கும்
பெற்றோருக்கு உண்டா உண்மை சுதந்திரம் ?
நடுஇரவில் தனியாளாக ஒரு பெண் நடந்து
செல்லும் "பொன்"னாளே நம் நாட்டிற்கு
உண்மை சுதந்திரம் வந்ததென்று
அன்று முழங்கினாரே அண்ணல் காந்தி
நாட்டின் இதயத்திலேயே நஞ்சை விதைக்கும்
நடுஇரவில் வெறிநாய்கள் ஒன்று கூடி
அழகுமலரை சூறையாடிச் சிதைத்தழிக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?
அடிநாக்கில் ருசி மறந்தாலும்
அடிவயிற்றில் பசி மறக்காத இந்த உலகத்திலே
உலகத்திற்கே பசிபோக்க படியளந்த
என் சேற்று உழவன் இன்று பிடி சோற்றுக்கும்
வழியின்றி வளர்த்துவிட்ட பிள்ளைகள்
நட்டாற்றிலே நிற்கதியாய் தவிக்க விட்டுப்போனது போல்
நட்டுவைத்த பயிரெல்லாம் வாய்க்காலில் நீரின்றி
கருகுவது காண மனம் பொறுக்காது
நடுநெஞ்சில் வலிவந்து அவன் உயிர்விடும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?
யானைகட்டிப் போரடித்த சோழவள நாட்டின்
பெருமையை பக்கங்கள் தோறும் தவறாமல்
புகட்டும் என் தமிழ் புததக சான்று கொண்ட மண்ணில்
இன்று உண்ண உணவுக்கு வழி(வகை)யின்றி
பயிரெல்லாம் உயிர்விட்டுபோக
தான் வளர்க்கும் மாட்டுக்கும் உணவின்றி
தொழிற்சாலையில் கழிவாகத் தூக்கியெறியும்
பஞ்சை நனைத்து போஜனமாக்கும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?
தெருக்கோடியில் நிற்கும் ஏழையை
திரும்பிப் பார்க்கவும் நேரமின்றி
எங்கோ எதற்கோ எதையோ
வேக வேகமாய்த் தேடி அலையும் பெருங்கூட்டம்
ஒருபக்கம் - உள்நாட்டில் தேக்கிவைத்தால்(ள்)
கருப்பாகிப் போகுமென்று தூரத்து தேசத்திற்கு
நாடுகடத்தி வெள்ளையாக்கும்
வித்தை தெரிந்த வசதியான வியாபாரிகள் வாழும்
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?
நதி, நீர், காற்று, வெளி, நிலம் என ஐந்தினைப்
படைத்தான் பகிர்ந்து வாழ் என்றான் இறைவன்
அதற்கு பஞ்சபூதங்கள் என்று பெயர் படைத்தான் மனிதன்
அப்படி பெயரிட்ட கோபத்தில்தானோ இன்று
பூதாகாரமாக வெடிக்கின்றனவோ
பஞ்சபூதப் பிரச்சனைகள் ?
தாகத்திற்கு சொட்டு நீர் அளிக்காமல்
மாண்டு போன பின்னே அணை திறந்து
வெள்ளமிட்டால் யாருக்குப் பயன் ?
இத்தேசத்தில் உண்டோ உண்மை சுதந்திரம் ?
கனவுகள் ஆயிரம் நெஞ்சிலுண்டு
திட்டங்கள் ஆயிரம் தாளிலுண்டு
சிந்தனைகள் ஆயிரம் புத்தியிலுண்டு
செயல்களை செய்யத்தான் இங்கே
கைகளைக் காணவில்லை, விரைவாய் வருவதில்லை
அப்படியே கைகள் செய்திட வந்தாலும்
சுயலாபம் சுரண்டாமல், புறங்கையைச் சுவைக்காமல்
எந்த "நல்ல" மனமும் நன்மைக்கு இங்கே இடம் கொடுப்பதில்லை
இந்த தேசத்தில் உண்டா உண்மை சுதந்திரம் ?
இதை எல்லாம் மீறி
எங்கள் வண்ணங்கள் வேறுபட்டாலும்
எங்கள் எண்ணங்கள் பலசமயம் மாறுபட்டாலும்
"அனைவரும் இந்தியர் " என்ற உணர்வு மட்டும்
உள்ளத்தில் உறுதியாய் பிரியாது என்றும்
உறைந்து நிற்கும் எங்கள் உயிர் மூச்சு பிரியும்(விடும்) வரை...
செங்கோட்டையில் என்றுமே செம்மாந்து பறக்கும்
நம் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்தபடி....
மீண்டும் ஒருமுறை அனைவருக்காகவும்
"நல்ல" குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
நாடு நலம் பெற வேண்டுமென்று....
No comments:
Post a Comment