Wednesday, October 31, 2012

சங்கீத சலங்கை



 சங்கீத சலங்கை 







வழியெல்லாம் வழிந்தோடும் சதங்கையின் சங்கீதம்
குதிக்கும் இடமெல்லாம் கொப்பளிக்கும் கும்மாளம்
உருண்டோடும் திசையெங்கும்  உருகி வழியும் ஈர நாதம்
ஓடுகின்ற பாதையெல்லாம் ஓயாமல் தாளமிடும்
நதிமங்கை கால் அணிந்த
துள்ளி எழும் வெள்ள(ளி)க்  கொலுசு
சல சல சல வென....

Sunday, October 21, 2012

மயிலிடம் மயங்குகிறேன்


 மயிலிடம் மயங்குகிறேன் 






காதலியின் கடைக்கண் பார்வையும்
மாமலையையும் கடுகாக்கும் மண்ணில் காளையர்க்கு
ஆயிரம் கண்கள் விரித்து - நீ
அழகாய் அம்பலமாடும் ஆட்டம்
எக்காதலியை மயக்கவோ?

குளிர்மார்கழி பனிப்பாவை நோன்புதரித்து
கார்வண்ணக் காதலனைத் தன்
நெஞ்சூறிய அன்பால்
காயமின்றிக் கொய்தாள் கோதை ஆண்டாள்

கருங்களிறன்ன ஊர்கோலம் போகும்
கார்மேகத் தேர் கண்டு விட்டால்
பேரருவி நெஞ்சூறி
கூத்தாடும் உன் தோகை அழகால்

ஆணுக்கு அறிவு
பெண்ணுக்கு அழகு என்ற
உலகத்தின் விதியை
உன் மென்இறகால் மாற்றியமைத்த மை நீ !

ஆறாத ரணங்களையும் அருமருந்து தொட்டு
குணமாக்கும் அற்புதம் நீ !
அரசனையும் ஆண்டவனையும்
ஆடம்பரமாய் அலங்கரித்தது உன் அழகு !

பூமுகம் கண்டு மயங்காதோர்
தேன்குரல் கண்டு மயங்குவர்
மொத்த அழகையும் உன் மெத்த
அங்கத்தில் கொட்டி விட்டதால் என்னவோ
குரலின் இனிமைக்கென
குயிலைப் படைத்தானோ இறைவன்?

முள்ளின் காதோரம் வன்மையை உரைத்தது யாரோ?
மலரின் இதழோரம் மென்மையைக் குழைத்தது யாரோ?
உன் பட்டுச் சிறகோரம் வண்ணம் இழைத்தது யாரோ?
மலரிலும் மெல்லிய மென்மையின் மறுபெயர் நீதானோ?

அழகான பொன்மயிலே...
கொண்டைப் பூச்சுடி நீ நடக்கும் அழகு!
பசிகொண்டப் பார்வைக்கு அமுதூட்டும் நல்விருந்து !  

Tuesday, October 16, 2012

முத்துச் சரங்கள்

முத்துச் சரங்கள்  








அன்புத் தாயின் பூமுகம் பார்த்த
மறு நொடியே பாசத் தந்தையின்
தோள் விட்டுத் தாவி
அன்னையின் பட்டுக் கன்னத்தில்
முத்தமிடும் மழலையைப் போல

வான் தந்தைத் தோள் விட்டு
கீழிறங்கி தாய் மண்ணை சேர்ந்த மகிழ்ச்சியில்
முத்தங்களைச் சிந்தியதோ
மழைத்துளி
மீதமான அனைத்தையும் இங்கே
முத்துச் சரங்களாகக் கோர்த்ததோ...

Wednesday, October 10, 2012

கரைந்து போகும் காலம்








காலம் ஒரு சிறந்த  எழுத்தாளன்...
அது நம்முடைய வாழ்க்கைப் பதிவேட்டின்
பக்கங்களில் ஏதேனும் சில பதிவுகளை
எழுதிவிட்டுத் தான் போகிறது
நாம் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி...

காலம் ஒரு  அடிதொழும் பணியாளன்...
கையாளத் தெரிந்த கலைஞனுக்கு

காலம்...
கற்பூரம் தீண்டும் காற்றின் கரமாக
கரைந்துப் போகிறது
அடைமழைக்கு சரிந்துப் போகும்
செல்லரித்த செம்மண் சுவராக என்னை
கரைத்துப் போகிறது...

பயன்படுத்தும் காலம் கைசேர்ந்த பொன்னிற்கு சமம் - வீணாய்
கழிக்கப்பட்ட காலம் பாழாய்ப் போன பரிசுக்கு சமம்

வீணாகும் காலம் என்
காதோரம் சொல்லும் பாடம்
ஓடுவது வினாடி அல்ல!
உன் வாழ்கை துளிகள் என்று...

காலத்தை கைக்குள் அடை
கரை சேரும் உன் வாழ்க்கை