மயிலிடம் மயங்குகிறேன்
காதலியின் கடைக்கண் பார்வையும்
மாமலையையும் கடுகாக்கும் மண்ணில் காளையர்க்கு
ஆயிரம் கண்கள் விரித்து - நீ
அழகாய் அம்பலமாடும் ஆட்டம்
எக்காதலியை மயக்கவோ?
குளிர்மார்கழி பனிப்பாவை நோன்புதரித்து
கார்வண்ணக் காதலனைத் தன்
நெஞ்சூறிய அன்பால்
காயமின்றிக் கொய்தாள் கோதை ஆண்டாள்
கருங்களிறன்ன ஊர்கோலம் போகும்
கார்மேகத் தேர் கண்டு விட்டால்
பேரருவி நெஞ்சூறி
கூத்தாடும் உன் தோகை அழகால்
ஆணுக்கு அறிவு
பெண்ணுக்கு அழகு என்ற
உலகத்தின் விதியை
உன் மென்இறகால் மாற்றியமைத்த மை நீ !
ஆறாத ரணங்களையும் அருமருந்து தொட்டு
குணமாக்கும் அற்புதம் நீ !
அரசனையும் ஆண்டவனையும்
ஆடம்பரமாய் அலங்கரித்தது உன் அழகு !
பூமுகம் கண்டு மயங்காதோர்
தேன்குரல் கண்டு மயங்குவர்
மொத்த அழகையும் உன் மெத்த
அங்கத்தில் கொட்டி விட்டதால் என்னவோ
குரலின் இனிமைக்கென
குயிலைப் படைத்தானோ இறைவன்?
முள்ளின் காதோரம் வன்மையை உரைத்தது யாரோ?
மலரின் இதழோரம் மென்மையைக் குழைத்தது யாரோ?
உன் பட்டுச் சிறகோரம் வண்ணம் இழைத்தது யாரோ?
மலரிலும் மெல்லிய மென்மையின் மறுபெயர் நீதானோ?
அழகான பொன்மயிலே...
கொண்டைப் பூச்சுடி நீ நடக்கும் அழகு!
பசிகொண்டப் பார்வைக்கு அமுதூட்டும் நல்விருந்து !
No comments:
Post a Comment