Wednesday, November 21, 2012

கண்ணீர் மொழி

                                                          
                                                                     கண்ணீர் மொழி




அரும்பும் போதே சுரக்கும் கண்ணீர்
உப்பைத் தன்னுள் சுமக்கும்
தவிக்கும் போதும் உள்ளே
துடிக்கும் இதயம்
காயத்தைத் தன்னுள் சுமக்கும்

கொட்டித் தீர்த்தப் பின்புதானே
தெளிவாகும்
கருமேகம் சூழ்ந்த நீலவானம்
கண்ணீர் விட்டுத் தீர்த்தப் பின்புதானே
லேசாகும்
கனமான சோக இதயம்

கண்ணீர்....
அழகான உணர்வுகளின் ஆழமான பரிசு!
அது கூறும் கதைகள்
வார்த்தை வரையறைகளுக்குள் வராது
கேட்கும் காதுகளுக்கு எட்டாது

கண்ணீர்.....
விழித்தடாகங்களில் பூக்கும் நீர்மொட்டு!
கண்கள் எழுதும் கருணைக் கடிதம் !
இதயத்தில் ஜனிக்கும் ஜீவ ஊற்று !
மனம் பாடும் மௌனப் பாட்டு !

பலநேரம் பலருக்காக நீ சிந்தும்
புன்னகைத்தேன் கூட பொய்யாக கசக்கலாம்
ஆனால் உள்ளத்தில் ஊறிய
உண்மை உணர்வுக்காக உன்
விழியில் வழியும் கண்ணீரும் இனிப்பாகும்

உனக்கு புன்னகையைப் பரிசளிக்க
ஆயிரம் பேர் கூடலாம்
ஆனால் கண்ணில் பெருகும்
கண்ணீரைத் துடைக்க ஓடிவரும்
அன்பு விரல்கள் கிடைப்பது அரிது

ஆழமாய் அறிந்து கொண்ட அன்பு
உன் கண்ணீரை விலை பேசாது
முழுமையாய் மனதைப் புரிந்து கொண்ட உறவு
கண்ணீரே சூழ விடாது

கண்ணீர்....
கண்கள் கொட்டும் வைரங்கள் !
அதை அதன் மதிப்பை நன்கு
உணர்ந்தவர்களுக்கு பரிசாக அளியுங்கள் !

கண்ணீர் காயும் முன்னே காயம் ஆறுமா?
மனதில் முள்ளான காயம் மாயம் ஆகுமா?
வினா தொடுத்தேன் என்னுள்
விடையாய் வழிந்தது
மீண்டும் என் விழிகளில்
கண்ணீர்!!!

No comments:

Post a Comment