Thursday, November 8, 2012

போராட்டம் ஒரு தேரோட்டம்


 போராட்டம் ஒரு தேரோட்டம் 






புயலாகும் போராட்டம்
உருண்டோடும் வாழ்வின்
ஒவ்வொரு பக்கங்களிலும் படிந்தோடுகிறது
புரண்டோடும் அதைப்
புரட்டிப் பார்ப்பதும் புரட்டிப் போடுவதும்
நம் கையில் உள்ளது

நினைவோடும் மனதில் போராட்டம்
வேரோடிய போதிலும்
நனைக்கும் அதன் கால்களை
நம்பிக்கை நீரோடிவிட்டால்
புண்ணாய்ப் புரையோடிப்போன காயங்களும்
மாயமாய் மறைந்தோடிப் போகும்

துணிவோடு  எதையும் போராடிப் பார்க்கும் மனம்
பணிவோடு பெற்று விட்டால்
வஞ்சமாடும் போர்களமும் பூக்களம் ஆகும்
வன்மமாடும் முட்காடும் மலர்வனமாகும்

துவண்டோடும் துன்ப ஆழ்கடலின் அமைதியானாலும்
துள்ளியோடும் இன்பக் கரையோர அலையானாலும்
கனிவோடு கலங்காமல் ஏற்கும் - அவ்விரண்டும் ஒன்றென
சிறப்போடு சீர்தூக்கிப் பார்க்கும்
சலனமில்லா மனது

பழகிப் போனால்
அனலாய்த் தீண்டும் போராட்டமும்
திருவிழாத் தேரோட்டமாகும் - ஏனெனில் நாம்
இன்பத்தை வடம் போலே இழுக்கத் தேவையில்லை
துன்பத்தை விடம் போலே பருகத் தேவையில்லை
அலங்காரத் தேரில் ஆனந்தமாய்
பவனி வரும் உற்சவர் போலே
வலிகளை வரவேற்று
துக்கங்களைத் தூக்கியெறிந்து
உற்சாகமாய் வலம் வருவோம்
வாழ்க்கை என்னும் வீதியிலே...


No comments:

Post a Comment