தாயைத் தேடி
உடல்மூடிய ஓடு உடைத்து
உயிர்வாங்கி உலகிற்கு நான்
ஓடோடி வந்த நொடி முதலாய்
ஓயாமல் தேடி அலைகிறேன்
உயிர்காத்த என் தாயின் தடயங்களை
உடன்பிறந்தெனைப் பிரிந்த
சுற்றங்களின் சுவடுகளை...
கடமை முடிந்ததென அவள் கைவிட்டுப் போனாளோ
துணிவிருந்தால் திரும்பட்டும் என்று தடுமாறிப் போனாளோ
தெரியாமல் தவிக்கிறேன்...
கருவறை பிரித்ததோ - எங்களை
கடற்கரை பிரித்ததோ என்
கண்விழி திறந்தது முதல்
காணாமல் துடிக்கிறேன்
கிடைக்கவில்லை அவர்கள் இதுவரை...
ஆழித்தாயே ! உன் அகன்ற அன்பு அலைகளால்
இந்த அனாதையை அணைத்துக் கொள் !
மூச்சறுந்து மரிக்கும் முன்னே என்னைப்
புனல் மடியில் ஏந்திக் கொள் !
வாழ்விழந்துப் போகுமுன்னே
கடல்வாசல் சேர்த்துக் கொள் !
விதிவசத்தால் வழிமாறும்முன்னே
ஆதரவாய்த் தழுவிக் கொள் !
புரியாத என் பூர்வீகம் தேடி வருகிறேன்
புதுவாழ்வு நீ அளிப்பாய் என்ற நம்பிக்கையில் !
No comments:
Post a Comment