Friday, January 11, 2013

போகிறாள் அவள் !




நண்பர்களே ! இது ஒரு காதல் கவிதை....

கொஞ்சிக் கொஞ்சி உயிரைக் கொல்லும்
இதயக்கோவிலில் தஞ்சம் கொள்ளும்
சின்னச் சின்ன சிரிப்பில் நெஞ்சம் அள்ளும்
ஒற்றைப் பார்வையில் உள்ளம் துள்ளும்
ஓர் வஞ்ச(க) கஞ்ச வஞ்சி - அவள்
பஞ்சாய்ப் பிரிந்து போகும் போது
ஓர் நஞ்சாய் விளைந்தது இக்காதல் கவிதை...

முன் அறிவிப்பு : இது கொஞ்சம் நீளமானது...
எனவே பொறுமையாக ( இருக்கும் போது ) படிக்கவும்.

காதலை வெறுப்போர் இவ்வுலகில் யாருமில்லை.
உண்மைக் காதலை மறுப்போர்க்கு மனிதர் என்று பேரில்லை
உள்ளக்கரைகள் வந்து மோதாத அன்பின் அலைகள் ஏதுமில்லை
கண்கள் பேசும் வார்த்தைகள் இவ்வுலகின் எம்மொழி
அகராதியிலும் நிச்சயம் இடம் பெறவேயில்லை...     

கவிதை தலைப்பு : போகிறாள் அவள் !

காதல் குளத்தில் காலாட்டிக் கொண்டே
இயல்பாய் கல்லெறிந்து விட்டு எழும்
அதன் அலைகளில் கால்நனைத்துக் களவாடிப் போகிறாள் அவள் !

பார்த்தவுடனே பார்வையைப் பறிக்கும் மின்சார மின்னலாய்
விழி அம்புகளில் ஆலமை அதிகமாய்த் தடவி
என் இதயத்தைக் குறிவைத்து எய்தி
அதை ஆறாத காயக்களமாக்கிப் போகிறாள் அவள் !

ஆழமான ஆழியிலே பிறந்த வெண்சங்காய்
உயர்ந்திருக்கும் அவள் கழுத்தின் பக்கத்து நுனியில்
அழகான கேள்விக்குறியாய் வ(வி)ளைந்திருக்கும்
மாந்தளிர் செவியின் உத்திரத்திலே துளையிட்டு
தூக்கிலிட்டு தொங்கிச் சிணுங்குகின்ற சிமிக்கியாய்
என்னை துக்கத்தில் தவிக்கவைத்து போகிறாள் அவள் !

பஞ்சுப் பாதம் மண்மீது ஜதி சொல்லி கொஞ்சி நடக்கையில்
வழியில் ஓர் ஜீவனின் வாழ்வையும் வஞ்சிக்கக்கூடாதென
மிகுந்த எச்சரிக்கையாய் மிதிபடாது மென்மையாய்
பாதைக்கு நல்ல பண்ணிசைத்து சுரம் சேர்க்கும்
மலர்ப்பாதம் முத்தமிட்டே மயங்கிக் கிடக்கும் அவளின்
வெள்ளிக் கொலுசொலித்து என்னை மயக்கிப் போகிறாள் அவள் !

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும் நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும் குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர் வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய் உச்சிவரை நேர்வகிடெடுத்து
தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து போகிறாள் அவள் !

அசுரமாய் வீசிடும் கடும் சூறைக்காற்றில்
ஆலமரமே அடிவேரோடு சாய்ந்தாலும்
சமயோசிதமாய் சிந்தை கொண்டு செயல்பட்டு
சாதுர்யமாய் சூழ்நிலையைச் சமாளிக்கும்
ஆற்றுமேட்டில் அழகாய் காற்றசைத்தால் ஆடி நிற்கும்
நாணலெனவே நடை பயின்று நடந்து போகிறாள் அவள் !  

மென்மையாய் பணிவு போர்த்திய பெண்மையாய்
வானவெளியில் காற்றடிக்கும் திசையெல்லாம்
கலைந்து போகும் வெண்மேகமாய் என்னைக் கடந்து
வேகமாய் வீசும் காற்றிலே குழம்பித் தவிக்கும்
திசைக்காட்டியாய் என்னை அலைகழித்துப் போகிறாள் அவள் !

காய்ந்திருக்கும் பருவச் சுள்ளிகளை சேகரித்து
அன்பிருக்கும் காதல் பொறிகளை கண்களால் உரசி விட்டு
புகைந்திருக்கும் தீயை துப்பட்டாவால் விசிறிவிட்டு
நெஞ்சுருகும் நெய்யூற்றி அனல் கொழுந்துகளை வளர்த்து விட்டு
துடித்திருக்கும் என் இதயத்திற்கு இதமாய்த் தீ மூட்டிவிட்டு
பதமாய்க் குளிர்காயச் சொல்லிப் போகிறாள் அவள் !

விழிதடாகங்களைச் சுற்றி வட்டமிடும் கருவண்டு கண்களுக்கு
நீள்வட்டமாய் நாள்தோறும் அவள் பூசிடும் கார்மையென
ஆளில்லா நள்ளிரவில் குவிந்திருக்கும் கும்மிருட்டில்
முதன்முதலாய்த் திருடத் துணிந்து வீடு புகும்
பழக்கமில்லா திருடனின் கைகளைப் போல
என் உள்ளம் நடுங்கவைத்து போகிறாள் அவள் !

காக்கைகளும் குருவிகளும் கூட்டமாக அமர்ந்து
காலைநேரத்தில் கூடிக்கூடி மும்முரமாய் ஊர்க் கதைகள் பேசும்
கனமான மின்கம்பி கடத்துகின்ற மின்சாரமாய்
கணப்பொழுதில் என்னைக் கடத்திப் போகிறாள் அவள் !

உயிர்த்திரியை உயரமாய் உயர்த்தி விட்டு
காதல் தீபம் அதன் தலையில் ஏற்றி வைத்து
தன்னைச் சுற்றி இருளில் தவிப்போருக்கு
மெய் உருகி உருகி வெளிச்சம் அளிக்கும்
மெழுகுவர்த்தியாக என் உயிர் உருக்கிப் போகிறாள் அவள் !

பின்னால் பின்னல்களாய் கைகோர்த்துக் கொண்டு
குதூகலமாய் ஓடி விளையாடும் பள்ளிப் பிள்ளைகளைப் போல
தட தடவெனவே சத்தமிட்டு குலுங்கி குலுங்கி
தடதடக்கும் இரு தடங்களில் கால்பதிக்கும்
விரைந்தோடும் இரயில்வண்டி போனதும் நசுங்கும்
ஒற்றை வெள்ளி நாணயமாய் என்னை நசுக்கிப் போகிறாள் அவள் !

அவள்  இருக்கும் திசையே என் ஆசைச் சூரியன்
தினம் உதிக்கும் காலை கிழக்கென
நிதம் எனக்கு உணர்த்திப் போகிறாள் அவள் !
வரும் ஒளி குவிக்கும் அடியாய்
அவள் நினைவுகளை சுமக்கும் ஜாடியாய்
கரிக்காத காதல் கடலுக்கு மூடும் மூடியாய்
என்னை நினைக்க வைத்து நீங்கிப் போகிறாள் அவள் !

நிறம் கருத்து உடல் பருத்து செம்மாந்து நிற்கும்
பேரலங்காரத்துடன் உலா வரும் பட்டத்து யானையைப் போல
இருக்கும் கரு(டு)ம் பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்
உயர்மலையின்  மீதிருந்து வீழும் வெள்ளருவியைப் போல
என் நெஞ்சில் பட்டு சிலிர்க்கும் சாரல்களாக சிதறிப் போகிறாள் அவள் !

கைதொட்டால் அகம் மகிழும்
நாசி முகர்ந்தால் மனம் நிறையும்
உடல் பூசினால் பனிச்சிகரமென குளிரும்
பரவுகின்ற மேனியெங்கும் மணம் வீசும்
செங்குருஞ்சி மலைப்பிறந்த சந்தனமென எனது
உள்ளமெல்லாம் நல்வாசம் வீசிப் போகிறாள் அவள் !

தேடுவோருக்கு ஒன்றுமே தட்டுப்படாத
மனம் குழப்பும் சிந்தனைக்கும் மட்டுப்படாத
புரியாத புதிராக அவிழாத முடிச்சுகள் போடும்
பனிக்கால குளிர்க்காற்றைப்போல புத்தி குடையும்
தடயமில்லாத குருதி வழியும் உயிர்க்கொலையைப் போல
என் உள்ளத்தை தடயமின்றி கொன்றுவிட்டுப் போகிறாள் அவள் !

தொட்டால் சுடுகின்ற நெருப்பில்
பட்டால் பொசுங்கும் பஞ்சாய்
விட்டால் மீதமாகும் சாம்பலாய்
என் மனதை சுட்டெரித்துப் பொசுக்கிப் போகிறாள் அவள் !

விழிகள் நூறு வினாக்கள் பார்த்ததும்
சலனங்கள் நூறு சிந்தையில் சுமந்து
நித்தம் நன்றாய் எழுதவும் வகையின்றி
மடித்து வைத்து விரைவாய் வெளியேறவும் மனமின்றி திணறும்
வகையாய் விடையளிக்க விருப்பமின்றித் தவிக்கும்
கடினத் வினாத்தாளைக் காணும் ஒரு சராசரி மாணவனைப் போல
விழியால் மட்டும் பேசி விடைசொல்லாது விலகிப் போகிறாள் அவள் !

எழில்நிலவை எட்டிப் பிடிக்கும் ஏக்கத்தில்
நாளெல்லாம் உழைத்துக் களைத்து விட்டு
கொல்லைப்புறக் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து
கவலையுடனே கால் நீட்டிப் படுத்துக் கொண்டு
ஏங்கித் தவிக்கும் ஏதுமற்ற ஓர் ஏழையைப் போல
என்னை ஏங்கவைத்து போகிறாள் அவள் !

உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லதென்று
அன்புடனே அவசியமாய் அம்மா அள்ளிப் போட்டாலும்
மறக்காமல் ஒதுக்கி வைக்கும் பொங்கல் மிளகாய்
என்னைத் தள்ளிவைத்து போகிறாள் அவள் !

காதல் பயிருக்கு பூவேலி போட்டு
பறந்து வரும் பறவைகளை நேரம் பார்த்து
ஏமாற்றவே வைக்கோல் கைவிரித்துக் காத்திருக்கும்
சும்மாவே சிரிக்கும் சோளக்காட்டு பொம்மையைப் போல
என்னை கனவுக் காட்டுக்கு காவல்வைத்து போகிறாள் அவள் !

மனதில் உறுதியாய் கட்டிவைத்த காதல் கோட்டையை
கணப்பொழுதில் கடைக்கண் ஓரத்தில் கண்ணியைப் புதைத்து
தரைமட்டமாக்கி விட்டு சந்தோஷத்துடனே
வந்த காரியம் முடிந்ததென கைத்தட்டிக் கொண்டு
என்னை கலங்க வைத்துப் போகிறாள் அவள் !

காட்டில் மாட்டைத் தொலைத்த மேய்ப்பனுக்கு
தன் தலைத்திரும்பும் திசையெல்லாம்
தவறிய அதன் மணியோசை தவறாமல் கேட்பதைப் போல
என்னுடனே அவள் இல்லாத வேளைகளிலும்
இதயக்கூட்டில் அவளின் நினைவோசை நீங்காமல்
கேட்கவைத்து கரையாமல் போகிறாள் அவள் !

சிவந்த ஞாயிறு கதிரொளி பட்டு உருகும்
சுள்ளென மேனி தொட்டால் உரைக்கும்
பச்சைப் பசும்புல் தலைத்தூங்கும்
குளிர்மார்கழிப் பளிங்குப் பனித்துளியைப் போல
குளிர்நிலவு பார்வையில் என்னை உருகவைத்து போகிறாள் அவள் !

சாலையோரம் சாயாமல் சிலையாகவே நிற்கும்
என்றுமே தல(ட)ம் மாறாத தளிர்களாக வளர்ந்திருக்கும்
தண்டின் நடுவில் சிறு சதுரமாய் இடம் வெட்டி
அதில் நிரந்தரமாய் கார்வண்ண எண் பொறித்த
உயர்மரமாய் என்னைக் காக்கவைத்து போகிறாள் அவள் !

ஊரின் எல்லையில் கேட்க நாதியற்று தனியாக நின்றிருக்கும்
ஊரின் பெயரை தன் தலையெழுத்தே என்று சுமந்திருக்கும் 
சாய்ந்து சரிந்து போய் சிதைந்து கிடக்கும்
இரட்டைக் கால் தாங்கும் ஒற்றை ஊர்பலகையாய்
என்னை அவளின் நினைவுகளை நெஞ்சப்பலகையில்
சுமக்கவைத்து நிற்கதியாய் என்னை நிற்கவைத்துப் போகிறாள் அவள் !

பார்வைப் புயல்களை வீசி நடு நெஞ்சில் நங்கூரமிட்டு
பருவத்தின் ஆரவாரப் பரிவர்த்தனைகளோடு
என் மீது உயிர் பறிக்கும் பெரும்படை திரட்டி
போரிட்டு உள்ளத்தை போர்களமாக்கிப் போகிறாள் அவள் !

என் ஆசை அறிந்திருந்தும்
என் விருப்பம் தெரிந்திருந்தும்
என் உள்ளம் புரிந்திருந்தும்
காதல் வெள்ளம் உள்ளங்களில் கரைபுரண்டிருந்தும்
முள் மூடிய கள்ளியாய் மனதை மறைத்துப் போகிறாள் அவள் !

ஒளிநிலவும் குடைபிடிக்கும் கனவுக்காதலியே !
நான் என் வாழ்வின் விடியலுக்காய்
உன் திசைநோக்கிப்  பார்த்திருக்கிறேன்
மழைமேகம் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
பாளமாய் வெடித்த செம்மண் நிலமாய்
பூம்பாவைப் பதிலுக்காய் பூத்திருக்கிறேன்

உள்ளங்கால் பாதம் தரையில் பட்டதுமே
கொதித்து எழும்பும் காயக் கொப்புளங்களைத் தரும்
கோடைசாலையாய் நித்தம் கொதித்திருக்கிறேன்

பகலெல்லாம் புல்லும் காய்ந்த வெட்டவெளியில்
வீணாகக் காய்ந்துவிட்டு மனமின்றி மலைமறையும்
மாலைமேற்கு அடர்மஞ்சள் சூரியனைப் போல
நான் மனம் மயங்கிக் கிடக்கிறேன்

உன் விருப்பவினா தெரியாமலே
என் காதல் தேர்வை எழுதிவிட்டேன் நான் 
வெறுப்பில் கோபமாய்க் கிழித்தேறிவாயோ? - இல்லை நீ
விருப்பமாய் என் வாழ்க்கை விடைகளை மதிப்பிடுவாயோ?
உன் முடிவுகளை எதிர்நோக்கி தினம் தினம்
கண்ணுறங்கா மாணவனாய் காத்திருக்கிறேன்

எப்போதும் போகிறாய் என்னை வேண்டுமென்றே நீங்கிவிட்டு
எப்போது வருவாய் என் வாசல் உன் மலர்ப்பாதம் தொட்டு...     
 


 
  
  
          

No comments:

Post a Comment