நண்பர்களே ! நெடுகாலம்முன்பு ஓர் தமிழ் சஞ்சிகையில் வெளிவந்த ஓர் கவிதை இது... நான் மிகவும் ரசித்தேன்... இதோ நீங்களும் ரசிக்க உங்கள் கனிவான பார்வைக்கு படைக்கிறேன்...
கவிதை தலைப்பு : என் அருமை மகள் பிறந்த அன்று !
கவிதைக்கான சுழல் : பரம்பரை பரம்பரையாக முதல் குழந்தை ஆணாக மட்டும் பிறக்க வேண்டும், ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் வைராக்கிய குடும்பம் அது... அக்குடும்பத்தின் மூத்த மருமகள்
கருவுற்றிருக்கிறாள். இரு வீட்டார் தரப்பிலும் அனைவரது வேண்டுதலும் ஆணாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வரம். மழலை அனைவரின் கனவையும் பொய்யாக்கிப் பிறந்தது. ஆம், அது ஒரு அழகிய பெண் குழந்தை.
எதிர்பார்ப்புகளுக்கு கிடைத்த எதிர்பரிசு. பெற்ற அன்னையும் குழந்தை முகம் காண மறுக்கிறாள். உற்றமும், சுற்றமும் மனம் சுருங்கிப் போய் நிற்கிறது.
இந்த சூழ்நிலையில் அக்குழந்தையின் தந்தையின் எண்ணங்களும், சிந்தனைகளும் இங்கே வார்த்தைகளாக, உங்களுக்கு கவிதையாக...
" அருமை மகளே!
நான் மணந்த வாச மலரில் பூத்த சிறு மலரே !
மருத்துவமனையின் உள்ளே உன் தாய்
நகம் கடித்து வெளியே நின்றேன் நான் !
மகன்தான் பிறப்பான் என்றே எங்களது
அனைவர் மூளை மேடைகளிலும் ஒரே கற்பனை
எங்கள் இருவரின் நூலிடையே வேண்டுதல் நெசவு !
கதைப் பின்னலில் ஓர் எதிர்பாராத மின்னலாக நீ !
மகளே ! நீ பிறந்தாய் என்றதும் உன்னைப் பார்த்த
அனைவரது மன ஈர மண் வற்றி பாலைவனக் காற்று !
கண்கள் வானில் அம்புகள் குத்தின !
கடல் அலை ஆனது உடல் இரத்தம் !
சுவையால் பிறந்தது சுமை ஆகியதே என்று
தொங்கிய தலை - தோளில் விழுந்தது அனைவருக்கும் !
அறையினுள்ளே செல்கிறேன் - உன் தாய் முகம்
ஒளி தொலைத்த விடியல் விளக்காய்
வானில் கலைந்து மிதக்கும் வெண்முகிலாய்
என்னைப் பார்க்காது எதிர்பக்கம் திரும்பி
ஒரு சொட்டு நீரை ஒளித்து வைத்தது !
"பெண் பிறந்தால் என்ன இப்போது?"
நம் நாட்டுக்குப் பெயரே - பாரதமாதா!
நம் மொழிக்குப் பெயரோ - தமிழன்னை!
வணங்கும் தெய்வமும் பெண் தானே
கலைமகள், பொன்மகள், மலைமகள் என்று !
நம்மைச் சுமக்கும் பூமியும் ஒரு பெண் - பூமித்தாய் !
துள்ளி ஓடும் வெள்ளி நதிகளும் பெண்தான்
கங்கை, யமுனை, நர்மதா, சிந்து, காவேரி என்று !
நான் அடுக்கடுக்காய் சமாதானக் கோட்டைகளை
கட்டினாலும் உன் அன்னை நகைக்காத சிரிப்பால்
அத்தனையையும் சடாலென்று உடைத்தாள் !
நான் கைநழுவியப் பானையாய் தூள் தூளாய்
சிதறிப் போய் சிலையாகி நின்றேன் !
"நீங்கள் சொல்கின்ற நாடு, மொழி, நதிதேவியர்க்கு எல்லாமே
இன்னும் திருமணம் இல்லையே இதுவரை
ஒருவேளை வரதட்சணைக்குப் பயந்தே அவர்கள் யாவரும்
கைபிடிக்க கரமின்றி காலம் கடத்துகின்றனரோ - கன்னியராய் !
என்றவாறு முறைத்தாள் உன் தாய் முல்லை !
விளக்க முடியாத கேள்வியின் விடையாக
எடுத்துச் சொல்ல முடியாத ஏட்டுச்சுரைக்காயாக
அவள் முன்பு அடி மறந்து நின்றேன் !
தொட்டிலில் படுத்திருக்கும் என் தங்கநிறப் பனிக்கட்டியே !
"ஆணா, பெண்ணா !" - அது தேவையில்லை எனக்கு
பொற்பெட்டகத்தில் பிறந்த தங்க முத்துக்களை
உரசிப்பார்த்து சோதித்து அறிவது பிடிக்கவில்லை எனக்கு !
சரி இருக்கட்டும்... அவள் ஒரு புறம்...
என் நண்பர்களின் முகத்தில்
நைந்த கம்பியில் மின்சாரம் ஏறிய இறுக்கம்
எடுத்துக்கொள்ள இனிப்பு நீட்டினேன்
எனக்கு குழந்தை பிறந்தது என்று...
எடுக்கும் கைகளில் ஏனோ பிடிப்பில்லா தயக்கம்
ஆண்கள் மட்டுமா? - இல்லை இல்லை
எனது அம்மாவின் ஆசையே - முத(லி)ல் பேரன்தான்
எனது துணைமயிலின் தாய்க்கும் ஆசை அதுதான்
"பிரசவத் தேர்வில் தனது மகள் தோற்றுப்போய்விட்டாளாம் !
என் அக்கா, தங்கை, எதிர், அண்டை வீட்டுத்
தாய்க்குல மனங்களில் எல்லாம் ஏனோ
மனதோரம் ஒதுக்கல்கள் - உதட்டின் பிதுக்கல்கள் !
என் பாட்டியின் சொல் என்ன தெரியுமா?
"ஆணோ, இல்லை பெண்ணோ - இது ஆண்டவன் சித்தம்"
ஒருவேளை பக்திச்சொல்லா இது?
வாழ்ந்து முடிந்த நெஞ்சத்தின் வைரச் சொல்லா இது?
இல்லை பிறந்துவிட்டது... பிறந்ததை என்ன செய்வது என்ற
பெருஞ்சங்கடத்தை சலிப்போடு
செரித்துச் சீரணிக்கும் ஒரு சித்தாந்தச் சொல்லா இது?
என் அன்புக்கிழவி தெளிவாய் என்னைக் குழப்பிவிட்டாள்
ஆனாலும் என் முத்தான மகளே !
ஆழிசூழ் உலகின் அழகான ஆடிப்பிறையே !
எத்தனை உள்ளங்கள் உன்னை வெறுத்தாலும்
ஒரு மகளை அவளின் "அப்பாக்கள்" என்றுமே வெறுப்பதில்லை !
ஒரு மகன் அப்பாவுக்கு சண்டைச்சேவல்
ஆளாகிவிட்டால் அவன் நண்பன்!
தோள்தாண்டிவிட்டால் அவன் தோழன் !
ஆனால் எப்போதும் என்றென்றும்
அப்பாக்களுக்கு மகள்கள் வளருவதே இல்லை !
இருந்தும் மகளே ! - நீ எனக்கு எப்போதும்
அடிநா திகட்டாத அச்சு வெல்லம் !
அடிநெஞ்சு இனிக்கின்ற அமுதச் செல்லம் !
அன்பு மகளே ! ஒரு உண்மையான உளவியல் இரகசியம்
ஒன்று உண்டு தெரியுமா உனக்கு?
ஆண் குழந்தைகள்: "அம்மாவின் தோளை விடாத குரங்குக்குட்டிகள்!"
பெண் பிள்ளைகள்: " அப்பாவின் முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு அம்மாவின் மடியில் இருந்து
அப்பாவின் தோளுக்குத் தாவும் அணில் பிள்ளைகள்!"
என்றும் என் அன்பான அணில் பிள்ளை நீ !
என் வாழ்க்கையை வண்ணமாக்கிய வானவில்லே!
என் கனவுப்பூந்தோட்டத்தில் விளையாட
ஆசையுடன் ஓடிவரும் பெண்மயிலே!
உன் அன்னையின் பாராத அன்பு
குத்துகின்ற முள்மெத்தை ஆனாலும்
அவளின் பொன்மடி முள்முடி ஆனாலும்
தாங்கிக்கொள்ள நீ கண்மூடித் தூங்கிக்கொள்ள
தந்தையின் திண்ணமான தோள் உண்டு உனக்கு...
பட்டுப் பஞ்சணையாக - பாசம் தேக்கும் நெஞ்சணையாக...
எனவே நம்பிக்கையோடு வா மகளே...
என்னை நம்பி கையோடு வா மகளே....
No comments:
Post a Comment