Friday, January 4, 2013

அன்பு மட்டும் அநாதையா(ய்)??!!!...


அன்பு மட்டும் அநாதையா(ய்)??!!!...



இறைவன் என்னும் தலைவனின்
ஓர் வழி சன்னதியை அடைய
உலகில் மதங்கள் என்ற பல்லாயிரம் பாதைகள் உண்டு

வாசல்கள் பல்லாயிரம் திறப்பினும்
வந்துசேரும் இடம் என்பது ஒன்றே
மார்க்கங்கள் பலநூறு இருப்பினும்
மனம் தழுவும் மலரடிகள் ஒன்றே

நிறம், மணம் எனப்பல மாறினாலும்
மலருக்கு நடக்கும் பூசைகள் ஒன்றே
மதம், இனம் எனப்பல வேறானாலும்
மனிதனுக்கு மனம் என்பது ஒன்றே

அன்போடு நாம் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஆண்டவனுக்கு அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்
அகமும் முகமும் மலர்ந்து பழகின்
சுடும் பாறை பகையும் ஆகுமே சுற்ற பந்தம்

அமைதியான அன்பு உள்ளமே
ஆண்டவன் வாழும் ஆலயம்
அன்போடு அமைதி தவழும் ஆன்மாவே
இறைவன் ஆளும் இன்பதேசம்

பச்சைக் (காய்)கறிகளை சமைத்தால்
உருவாகுமே சுவையான பண்டம்
மனதின் இச்சைகளை சமைக்க
தோன்றியதுவே சமயம் - அது
சுழற்றிச் சுழற்றிச் சாட்டையாய்ச் சொன்னது - அன்பு

சமயங்களில் சமயம் கூட சாயம் போகலாம்
ஆனால் எந்த சமயத்திலும் சாயம் போகாதது - அன்பு
எந்த சந்தர்ப்பத்திலும் சாய்ந்து போகாதது - அன்பு
மண் முழுதும் மரித்துப் போனாலும் மரிக்காதது - அன்பு

அருள் வேண்டி பொருள் கொடுத்து
வரம் கேட்டு நின்றால்
அவன் உண்மையான பக்தனில்லை...
பொருள் பெற்று அருள் எடுத்து
வரம் அளித்து நின்றால்
அது உண்மையான தெய்வமுமில்லை...
எவ்வளவு கொடுத்தாலும்
எவ்வளவு பெற்றாலும்
அணுவளவும் குறையாதது - அன்பு

அகன்று கிடக்கும் இந்த
அளப்பரிய பூமிக்களிற்றை
அதிகாரம் கொண்டு அடக்கிடும்
அற்புத அங்குசம் - அன்பு

உள்ளத்தில் உண்மையாய் ஊறியதில்
சிறுதுளி முகந்து மனம் மகிழ்ந்து
நீ கொடுக்கும் உன்னத அன்பு
காலம் கழிந்து பரந்து விரிந்து
கண்ணுக்கெட்டாத எல்லையுடைய
கடலாய் நாளை உன்னிடமே
திரும்ப கரைப்புரண்டு ஓடிவரும் - அன்பு

திறக்காத ஜன்னல்களில் தென்றல் தீண்டாது
எழுதாதப் பக்கங்கள் அர்த்தங்களை அளிக்காது
நீல வானம் நிறம் மாறினாலும் - என்றும்
ஏழு வண்ண வானவில் நிறம் மாறாது
அடிநெஞ்சில் ஊற்றெடுக்கும்
உயிரெனவே துடித்திருக்கும்
இதயத்தின் இசையாக இணைந்திருக்கும்
இதமான தாயின் தாலாட்டு - அன்பு

எழுதி எழுதிக் குப்பைகளில்
சேர்கின்ற வார்த்தைகளைத்
தூங்காமல் துரத்தித் தேடும்
கவிஞனின் கிழிப்பட்ட காகிதக் குவியல் அல்ல - அன்பு
கற்றறிந்த கல்விமாந்தர் பலரும் தம்
அறிவுத்திரிகளைத் தூண்டி விட்டு
உலகிற்கு ஒளிதீபமாய் விளங்க
துணைத்தேடும் பெறுவதற்கு அரிய நூல் தானே - அன்பு

நதிகளும், நாம் நடக்கும் வழிகளும் மாறலாம்
தடைகள் பல தோன்றலாம்; தடங்கள் மாறலாம் ;
தடங்கல் தாண்டலாம் - அது போல
வாழ்வில் வலிகளும், வழியும் விதிகளும் மாறாது;
மனதில் காயங்கள் தோன்றாது
வாழ்க்கை சுவை அனுபவமாய் ஆகாது;
இன்பமும் துன்பமும் சரிபாதி கலக்காது
வாழ்க்கை இனிப்பாய் இருக்காது;
அன்பு இல்லாத இதயம் என்றும்
கிழக்கையே காணாத சூரிய உதயம் !

நாம் கைப்பிடித்து கொண்டு போகும் வழிகள்
சுகமானதாக அமையும்
நம்முடன் கைகோர்த்து கொண்டு நடக்க
அன்பு விரல்கள் அழகாய் அமைந்தால்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்று அன்று
ஒற்றை வரியில் சுழலும் இந்த உலகமனைத்திற்கும்
அன்பின் அளவுகோல் இயற்றி அளந்து சென்றானே
எனது அருமைத் தொன்தமிழ்ப் பாட்டன்
அவனது பேர் எண்ணம் இன்று பொய்த்துப் போனதுவோ ?
பாரெங்கும் அதன் பயன் அறியாமல் பொருளிழந்துப் போனதுவோ ?
யாவருக்கும் அடிநெஞ்சில் அன்புநதி ஆவியாகி
பாளமாகக் வெடித்துக் காய்ந்து ஈரமின்றிப் போனதுவோ ?  

அன்பின் வழியது உயிர்நிலை என்கிறது  தமிழ்ச்சங்கம்
அன்பே உலகின் உயிர்நாடி என்கிறது  உயர்வேதம்
அன்பே பிரதானம் என்கிறது புனித விவிலியம்
அன்பே சிவம் என்கிறது திருமந்திரம்
அன்பென்னும் அருமருந்தை
நெஞ்சமென்னும் அட்சயப்பாத்திரத்தில்
ஆத்மார்த்தமாய்க் கலந்து அமுதாய் அர்பணித்தால்
ஆண்டவனையே அன்பளிப்பாய்ப்
அடைய முடியும் என்கிறது ஆண்டாள் பாசுரம்

ஆம் காலங்காலமாய் கண்ணுங்கருத்தமாய்
போதித்துக் கொண்டுதான் இருக்கிறது
வேதங்களும், சமயங்களும் அன்பை அன்பாக...
ஆனால் மனிதன் தான் எதையும்
ஏற்றுக்கொள்ள துணியாதவனாய்
கண்டுகொள்ளாத காட்டுமரமாய்
மரத்துப் போய் நிற்கிறான்
மனம் மாற மறுத்து திடமாக...

பளபளக்கும் பணத்தை நாடி
போகாத உலகம் போகவும்
செய்யாத முயற்சிகள் செய்யவும்
தயங்காமலும் தளராமலும்
துடிப்பாய் இயங்குகிறது மனித மனம்
ஆனால் அடுத்தவனிடம் எள்ளளவு அன்பு காட்டவும்
அல்லல்படும் இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவும்
தயங்கித் திணறித் தள்ளாடித் திரும்புகிறது மருகும் அவன் மனம்

அன்புக்கு விலைப் பேச
ஆயிரம் பேர் வரிசையில்
வரிந்துக் கட்டி நிற்கலாம்
ஆனால் அன்பை வழங்க மட்டும்
இங்கே யாரும் எந்த முகப்பிலும் தயாராக இல்லை

அன்பு தொடாத இதயம்
சுயம் இழந்த ரசம் போன கண்ணாடி
செல்லரித்து சிதைந்த செம்மண் கட்டி
மனிதனின் மனங்களை வாங்க
அன்பு ஒன்றே சிறந்த அங்காடி

ஆனால் இன்றோ,
அடிப்பட்ட நாயாக தெருவிலே வீசப்பட்டு
குற்றுயிராய்க் கரைகிறது அன்பு
எந்த கடையில் மலிவாய்க் கிடைக்கும்
என்று தேடிப்பார்த்தாலும்
கண்ணுக்குக் கிடைக்கவில்லை அன்பு 
கண்டுகொள்ள ஆளில்லாமல்
கைவிடப்பட்ட குழந்தையாய்
கதறிக் கதறிக் அழுதுக் கொண்டு
அனாதையாய் நடுத்தெருவில் நிற்கதியாய் நிற்கிறது அன்பு...
அணைத்துக் கொள்ள ஆதரவுக் கரங்களின்றி....     
  




No comments:

Post a Comment