சிந்தனைச் சரங்கள்
அறிவுக்கோல் ஊன்றி வாழ்க்கைச் சிகரம் ஏறு !
முயற்சியை மூச்சுப் பயிற்சியாக்கி முன்னேறு !
இதயத்தை ஆண்டவனுக்கு அடைக்கலமாய் இரவல் கொடு !
கற்ற கல்வியைக் கண்களாக்கி ஞாலத்தை நோக்கிடு !
கற்பதை விட கற்பித்துக் களி !
முடியாது என்ற ஒன்றை மறந்தேனும் நினைக்காதே !
கொண்ட நோக்கத்தை தீயவழியில் தீண்டாதே !
நல்வழியே நாளும் நிறைவு தரும் என்று நினை !
உயிர்ப்பயிருக்கு அறிவு நீரூற்றி வளர் !
உண்மையென்னும் ஏரைப் பூட்டி உள்ளத்தை உழுதுவிடு !
ஆழ்மனதை அகழ்ந்துப் பார் !
வைர நெஞ்சில் வைராக்கியத்தை விதை !
சுயசிந்தனையில் செயல் புரி !
மகிழ்வித்து மகிழ்வடை !
புன்னகைப் பூத்து பூரிப்படை !
அறிவாற்றலையும் ஆராய்ந்து அறி !
தூய்மையில் நெஞ்சத்தைத் தோய்த்து எடு !
சுகங்களை சுகித்து சுவை காண் !
காற்றையும் கைக்குள் அடை !
கண்ணீரையும் குற்றமற்றதாய் சிந்து !
அடைமழையாய் அன்பை நித்தம் பொழி !
அழியாத அறிவு ஊற்றை ஆகாரமாய் உண் !
அரிதாரம் அணியாத அன்பைப் பூண் !
அமுதத் தேன்மொழியால் அனைவரோடும் அளவளாவு !
இரத்தம் சிந்தாத நல்ல ரௌத்திரம் ருசி !
பாராட்டில் பகட்டாய்ப் பணிந்திடாதே !
போலியான பொன்னைப் போல் மின்னிடாதே !
பேதம் பார்க்காத தோழமையைத் துளிர்க்க விடு !
பொய்யில்லாத பாசத்தைப் பகிர்ந்துக் கொடு !
பகுத்தறிவுப் பாசறையில் பொய்மையைப் பொசுக்கு !
உணர்வுகளின் உயரம் உணர் !
விதைக்குள் விருட்சமாய் அடங்கி இரு !
வறுமையில் உழன்றாலும் உதவிட மறுக்காதே !
வாய்மை என்னும் விதியை வாய்க்குப் பூட்டு !
வேண்டும் என்பதை வெறுக்க விரும்பு !
இரப்போர்க்கு இயன்றதை அளி !
காலத்தை கவனித்துக் கருத்தில் கொள் !
என்றும் எப்போதும் நடுநிலைமையில் நில் !
திறமைகளைத் தீயினுள் திரியாய்ப் புதைத்து வை !
தீயில் உருகும் மெழுகாய்ப் பாவத்தைக் கழுவு !
தளர்ந்தாலும் தாழ்ந்தாலும் போராடத் தயங்காதே !
தொலைநோக்குப் பார்வையைத் தூரமாக்காதே !
நாளையை எண்ணி இக்கணம் இழக்காதே !
பெருமை சேர்க்கும் புதுமைக்குப் புத்துயிர் புகுத்து !
போதும் என்ற பண்பைப் புடம் போடு !
மனதின் காயங்களை ம(ற)றைக்க மன்றாடு !
மன்னிப்பையும் முழுமனதுடன் வழங்கு !
மதங்கள் மீறிய மனிதநேயத்தை மனதில் நிறுத்து !
இலக்கு உயர்ந்த உளி கொண்டு சிந்தனைச் சிற்பம் செதுக்கு !
இழுக்கான இதய அழுக்குகளை சருகாய்க் கருக்கு !
பசியைப் பொறுக்கப் பழகு !
சிதைக்கும் சிந்தனைகளைச் சிறையிடு !
எண்ணங்களின் ஊனங்களை உடைத்தெறி !
துணிவு என்னும் வேல் பிடித்து துயரக்களம் காண் !
கள்ளம், பள்ளம் இல்லாத வெள்ளை உள்ளம் கொள் !
கண்ணீருடன் கலந்துள்ள உப்பெனக் கருணை கொண்டிரு !
குலம் குன்றினாலும் குணம் குன்றா நல்மனிதனாய் மணம் கமழு !
கனவிலும் கொள்ளாதே (கல்லாதே) கர்வச் செருக்கு !
என்றும் நீ - நீக்கமற கொண்டிரு
அழிவே அறியாத அறிவுச் செருக்கு !
No comments:
Post a Comment