அன்புள்ள ஆசிரியருக்கு
களிமண்ணாய் கண்கண்ட மாணாக்கரை
சிறப்பான சீர்மிகு செம்பொன் சிலையாக
தான் கைக்கொண்ட கல்விஉளி கொண்டு
கருத்தைக் கவரும் நயம் கொஞ்சும் கலையாக
கீழுள்ள கிணற்று நீரான அவர்தம் வாழ்வை
வாடாத வளமிக்க விஞ்சும் மலர்ச்சோலையாக
மாற்றும் மனமுடைய கவின்மிகு கலைஞனே !
ஆற்றாது செயல்புரியும் ஆசிரியப் பெருமக்களே - உம்மைப்
போற்றாது போவார் உயர்ந்தவர் இல்லையே
வகுப்பென்னும் கருவறையில் வரமளிக்கும்
எங்கள் கோல் ஏந்திய கடவுளே !
பால் மறந்து பள்ளிக்கு வரும் பாலகனுக்கும்
அவனது பால்யம் முதல் பட்டப்படிப்பு வரை
பயிற்றுவித்து பண்டிதனாக்கும்
பகுத்தறிவைப் புகட்டும்
பாரினில் அனுதினமும் பட்டொளி வீசும் பகலவனே !
நீர் எமக்கு
பண்பையும், அறிவையும் திகட்டாமல் புகட்டி - எமது
திறமையையும், துணிவையும் தளராமல் திரட்டி
கனிவான கல்வியையும், எதிர்கால கனவையும்
நிறைவாக நெஞ்சில் கலந்துக் களிப்பூட்டி
மணிமணியாய்ப் பயிலும் மாணவர்க்கு
மதிப்பெண்ணையும், மாண்பையும் அளித்து முன்னேற்றி
அவர்தம் வாழ்வின் வடிவை வனப்புடன்
வனைந்துக் கொடுக்கும் கற்பிக்கும் குயவனே !
நீர்
அகிலம் யாவும் அள(றி)ந்த ஆண்டவனையும் புறந்தள்ளி
அன்புடனே அழியாத கல்விக்கண் கொடுத்து
அறிவால் அகிலம் அறியச்செய்த
அன்புள்ள நல்லாசிரியரை - என் மனமே
எந்நாளும் நீ மறவாமல்
போற்றிடுவாய் ! போற்றிடுவாய் ! போற்றிடுவாய் !
No comments:
Post a Comment