ஊனத்தின் குரல்
ஆண்டவனின் அச்சகத்தில் அழகாய்க் கோர்க்கப்பட்ட
உயிர்வாசகத்தின் அச்சுப்பிழை நான்
அவன் மெய்யென்னும் பாத்திரத்தில்
ஊற்றிவைத்த குறைநிலை நான்
பிரம்மனின் பெருமைமிகு படைக்களத்தில்
உருவான சிதைக்கலன் நான்!
என் புறத்தை மட்டுமே பார்க்கும்
பிறரின் அம்புப் பார்வைகள்
ஆயிரம் ஏளனம் பேசும்
இழிவுச்சொற்களை இரக்கமின்றி அள்ளி வீசும்
யார் சொல்வது இவர்களுக்கு
என் உள்ளம் ஊனமில்லாதது என !
என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையும்
இந்த சமூகம் காட்டும் திசைகளும்
சூரியன் மயங்கி மறையும்
மாலை மேற்கையே கைகாட்டுகின்றன
ஒருவேளை நான் என்றும்
முளைக்காமலேயே மறைந்து போகவேண்டும் என்றா தெரியவில்லை
யார் சொல்வது இவர்களுக்கு
விடியலின் திசை கிழக்கு என்பதை !
எந்தவொரு முழுமைப்பெறாத படைப்பிற்கும்
அதை உருவாக்கிய படைப்பாளி தான்
முழுப்பொறுப்பாவான் - இறைவா
என்னைப் படைத்தவன் நீ !
வெறும் படைப்பு நான் !
ஆண்டவனே !
ஊனப்பட்டு வரும் வார்த்தை வடுக்களை
உனக்குப் பதிலாய் நான் சுமந்து கொள்கிறேன்
என்றும் கண்ணீர் காய்ந்தாலும்
உள்ளே தைத்த காயங்கள் ஆறுவதில்லை
ஒருவேளை தருவதற்கு
வரங்கள் வைத்திருந்தால்
அதையாவது வஞ்சமில்லாமல் தா !
இருப்பினும் இறைவா...
என் வாழ்க்கை அகராதியை
முட்டாள்தனமாய் முடக்கிக் கொள்ள விரும்பவில்லை
முடியாது என்ற ஒற்றைச் சொல்லைத் தேடி
விடியும் என்று மேற்கு வானத்தை நாடி
ஊனங்கள் என்றுமே
வாழ்வின் உயரங்களைத் தடுக்காது
ஊனமில்லாத என் உள்ளம் சொல்கிறது !
என் உள்ளத்தைக் கேடயமாக்கி
என் அசையாத அங்கத்தை ஆயுதமாக்கி
வருகின்ற வசைகளையும் தருகின்ற வலிகளையும் உரமாக்கி
தவிக்க வைக்கும் துன்பங்களையும்
தனலாய்த் தகிக்க வைக்கும் துயரங்களையும் தூக்கியெறிந்து
போராடச் சொல்கிறது என்னை வாழ்க்கைக் களம் !
சருகுகள் உதிர்ந்தாலும்
கவலையில்லை கிளைகளுக்கு
ஈரச்சுவடுகளை வேர்க்கால்கள் தொடும் வரையில்
வாழ்வுண்டு துளிர்விடும் அரும்புகளுக்கு !
அங்கச்சருகுகள் ஊனமானாலும்
அல்லல்படாது என் மனக்கிளை
நம்பிக்கை ஈரமுண்டு - நிச்சயம்
துளிர்விடும் எனது வாழ்க்கை !
நாணல் தடுத்து நதிப்பாதை மாறுமோ
ஈனமல்ல உடம்பின் ஊனம்
நதியாக ஓடுவதில் சலனங்கள் இல்லை - அதன்
நில்லாத காலடியில்
எந்த களங்கமும் தங்குவதில்லை !
நதியாக ஓடு - எதிர்வரும்
விதியினை விரட்டு - எப்போதும்
வளர்பிறையாக வளரு - என்றும்
நிறைவாக வாழு என்கிறது
என் நல்ல மனது
வாழ்வின் விடியலைத் தேடி
இறகொடிந்த வண்ணத்துப்பூச்சியாய்
பயணத்தைத் தொடர்கிறேன்
மரணத்தின் வாசலில் மலர்ந்தாலும்
என்றும் புன்னகையை மறவாத
தண்டவாளம் அருகே சிரிக்கும் பூக்களைப் போல...
No comments:
Post a Comment