நண்பனுக்கு ஒரு கவிதை
என் இனிய நண்பனே !
உன்னைப் பற்றி ஒரு கவிதை நான் எழுத
ஓர்நாள் சிந்தையில் எண்ணம் கொண்டேன்
அக்கவிதை எதில் எழுத
உன் சிறப்பு அது சேர்க்கும்
என நினைத்து ஆவல் கொண்டேன்
நான் நினைத்த பொருள் தேடி
நாள்தோறும் தேடல் கொண்டேன்
அக்கவிதையை,
மயிலிறகால் எழுதிடவா
மெல்லிய நம் நட்பை மிக மென்மையாய் வருட
வண்ணச்சிறகால் விளித்திடவா
என் எண்ணங்களின் வண்ணங்களே நீதான் என்று விழைய
தூரிகை கொண்டு வரைந்திடவா
என் மனத்திரையில் நீங்கா ஓவியமான உன்னைப் புனைய
அழகிய மலரிதழ் எடுத்து தொடுத்திடவா
மனம் மகிழும் மணம் கொண்ட நம் உறவைச் சொல்லிட
எதிர்பார்ப்பு ஒன்றே நட்பில்லை
ஒன்றை எதிர்பார்ப்பதும் நல்ல நட்புக்கு அழகில்லை
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் நட்பன்றி வேறில்லை
எழுதும் என் எண்ணமதும் ஓயவில்லை
அதை எழுத எந்தப் பொருளும் கிடைக்கவில்லை
இறுதியான ஒன்றாக
எழுத பேனா என்று முடிவாக - அதில்
செங்குருதி வண்ண மை சேர்த்தேன்
எழுத மூடி முனைத் திறந்தேன்
என் பேனாவும் கொண்டது மிக்க மகிழ்ச்சி - அது
விதவைத் தாளுக்கு நெற்றித் திலகமிட எடுத்த முதல் முயற்சி!
அதற்குப் பின்
எழுதுவது என்ன தெரியாமல்
தொடங்கும் இடம் புரியாமல்
அன்பு மட்டும் குறையாமல்
நான் இருந்த சமயம் - என் நெஞ்சில்
ஓர் எண்ணம் உதயம் !
என்றும்... எப்போதும்...
கண்ணாடி காட்டிடும் நம் பிம்பம் மட்டும்
நன்றாகத் தெரியுமே உன்னைப் பற்றி எனக்கும்
நிச்சயமாகத் தெரியுமே என்னைப் பற்றி உனக்கும்
நம்மை நாம் அறிந்திருக்கிறோம் முழுவதுமாய்
பிரிவு வந்தாலுமே நீங்காத நினைவுகளாய்
இதில் என்ன இருக்கிறது புதிதாய்
அதை நான் எழுத கவிதையாய்
"நீயும் மற்றொரு நானல்லவா"
என்றெண்ணி மௌனமானேன்
மௌனத்தில் பேசலானேன்
அமைதியாய் ஓய்ந்தது என் பேனாவும்
அத்தாளைக் கண்டு - முயன்ற பின்பும்
முத்தமிட முடியாமல் பெருங்கவலைக் கொண்டு !!!
No comments:
Post a Comment