நட்பு என்னும் கற்பு
ஊசி துளைக்கும் குளிர்மார்கழிப் பொழுதில்
நாசி துளைக்கும் மலரின் மென்மெத்தை மேனியில்
தூக்கம் துறக்க துணிவின்றி
மயங்கிப் போய் எழ மனமின்றி
சயனித்துக் கிடக்கும்
அதிகாலைப் பனித்துளியைப் போல
விழி வாய்கால்களில் ஊற்றெடுத்து
இமைகளின் மடைத்தடைகளைக் கடந்து
பட்டுக்கன்னங்களின் படுகைகளில் பொங்கி வழியும்
கண் உறங்கும் கண்ணீரும் கரைந்தே போகும்
காட்சிகளைக் கவனமாகக் கவர்ந்து
தனக்குள்ளே ஒளி(ர் )ந்திருக்கும்
பார்வை செல்களில் அதைக் கைதாக்கி சிறைபிடித்து
அறிவுக்கு அப்பொருளின் உண்மை நிலைஉரைக்கும்
கருத்த கண்ணின் கருவிழியும்
நாளடைவில் ஒளியிழந்துப் போகும்
நடுக்கடலில் நிலையாக
நிற்க வேண்டி நங்கூரமிடும் கப்பலைப் போல
குறைந்த காற்றழுத்தமாய் மையம் கொண்டு
சுழன்றடிக்கும் கடும் புயலும்
விரைவில் நீர்வறண்டு வெடித்துவிட்ட விளைநிலமாய்
வலுவிழந்தே போகும்
திண்ணமாகத் தோன்றினும்
கலையழகு சுரப்பினும்
காலத்தேரின் கனத்த காலடியில்
சிக்கிச் சிதைந்த கடுக்காயைப் போல
திருக்கோவில் உறையும்
கல்தூங்கும் கற்சிலையும்
காலப்போக்கில் வடிவிழந்தே போகும்
தென்றல் தவழும் வழியில்
நர்த்தனமாடும் இளநாற்றைப் போல
காற்று வீசும் திசையில் திரண்டு வரும்
கானகத்தில் கடும்கோபம் கொண்டு
மூர்க்கமாகத் திரியும்
கருங்களிறுக் கூட்டமென மிதந்து வரும்
கார்முகிலும் கணப்பொழுதில் கலைந்தே போகும்
கொலைவெறியில் சீறிப்பாயும்
பெரும் பசியில் இரைத்தேடும்
வேங்கைபோல விரைந்தோடும்
வில்லாக வளைத்துக் கட்டி பின்
வெட்டிய வேகத்தில் விருட்டென விரையும்
வான்முட்டும் மூங்கிலின் பாய்ச்சலைப் போல
ஓய்ந்து நிற்க நேரமின்றி
உழன்று ஓடும் உலகத்தில்
கழன்று ஓடும் சக்கரத்தைத்
தன் கால்களில் கட்டிக்கொண்டு
பறந்தோடும் காலமும் நேரமும் கழிந்தோடிப் போகும்
மனதில் மகிழ்ச்சியை அள்ளும்
துள்ளுகின்ற வெற்றியும் சிலசமயம் விலகிப் போகும்
சிந்தையில் சோகம் கொள்ளும்
துவளுகின்ற தோல்வியும் பலசமயம் துவண்டு போகும்
போவதெல்லாம் போகட்டும் விடு நண்பா....
நெஞ்சமென்னும் சோலையிலே
தினம் பாசப்பூக்களைக் கொய்து
நாம் சேகரித்த நட்பின் தேன்துளிகள்
இதயம் துடிக்கும் மட்டும் இனித்திடும்
நம் உடையாத உள்ளக்கரைகள் மோதும்
ஓயாதஅன்பின் அலைகள் ஆயுள் முழுதும்
அலையடித்து கரை சேரும்
நாம் ஒன்றாய் மகிழ்ந்துகழித்த பொழுதுகள்
காலத்தின் கிரணங்களில் ஆவியாய்ப் போனாலும்
உள்ளத்தில் ஊறிய அழியாத உணர்வுகள் என்றும்
அடிமனதில் உப்பாக உறைந்து நிற்கும்
கண்மூடிப் போனாலும் - நம்மை
மண்மூடிப் போனாலும் நம்
கைவிட்டுப் போகாதது
உயிரான காதல் மட்டுமல்ல
உண்மையான நட்பும் கூடத்தான்...
நட்பில் உயிராக பழகுவதை விட
உண்மையாக பழகிப் பாருங்கள்
உயிர் உதிரும் வரை நட்பு நம்மை ஒட்டிக்கிடக்கும்
நிச்சயமாக....
நட்பிற்கும் கற்புகள் உண்டு
இல்லாத எல்லைகளை மீறாமல்
எழுதாத இலக்கணங்கள் வரையாமல்
உள்ளத்தில் எழும் தூய உணர்வுகளால்
அன்பின் அருமை உணர்ந்து
கவனமாக பேணிக்காக்கும்
சிறந்த உறவான நட்பிலும் கற்பு உண்டு...
நட்பு....
அகம் காட்டும் முகமாக
உண்மை வழிகாட்டும் நெறியாக
காயங்களுக்கு களிம்பாக
இதழ் அரும்பும் புன்சிரிப்பாக
தோள் தவழும் கரங்களாக
பசிப்பிணிக்கு உணவாக
துன்பத்தில் துணையாக
இதயம் மகிழும் இன்னிசையாக
இன்னும் இன்னும் அதிகமாய் நட்பு
பரிணமித்துக் கொண்டே செல்கிறது....
இன்னும் இன்னும் அதிகமாய் நட்பு
என்னை வார்த்தைகள் தேடச் சொல்கிறது...
No comments:
Post a Comment