Saturday, December 8, 2012

கற்றுக்கொள்வோம் இதை...


கற்றுக்கொள்வோம் இதை...





கற்றுக்கொள்வோம் - பின்பு
பெற்றுக்கொள்வோம்

பல்லாண்டுகளாகப்  பூமியில்
புதைந்துப் போன மரமும்
காலப்போக்கில் கடினமான கரியாகும்
கைக்கு கிட்டிய கரியும்
பதமாய்ப் பட்டைத் தீட்ட
ஒளிர்கின்ற வைரமாகும்

கரிகளை வைரமாக்கும்
கலைகளைக் கற்றுக்கொள்வோம் - நம்
கவலைகள் கானலாய்
காணாமல் போகட்டும் !!

குடைகின்ற கடும் வலிகளை
நல் இதயம் கடைகின்ற உளிகளாக - நாம்
உருமாற்ற கற்றுக்கொள்வோம்
நிலைமறந்த துயர்மனமும் - உயர்
கல் உடைத்த சிலையாக மாறட்டும் !!

எதிர்வரும் சவால்களை - நாம்
கதிர்விடும் நெல்மணிகளாக
உருவாக்கக் கற்றுக்கொள்வோம்
சாதனைப் பயிர்கள் ஆயிரம் - நம்
வாழ்க்கைநிலத்தில்  நன்றாக விளையட்டும் !!

சுமக்கும் சுமைகளை
துரத்தும் இடர்களை
தடுக்கும் சோதனைத் தடைகளை - நமக்குக்
கிட்டும் நல்வாய்ப்பு நடையெனவே கருதி
சுடும் சோகக் கனல்களைக் கொண்டு
சுவைக்கும் சமையலாக்கக் கற்றுக்கொள்வோம்
வருத்தும் துன்பப்பசிகளுக்கு
இனிக்கும் இன்பம் விருந்தாகட்டும் !!

காயச் சேற்றில் மலரும்
கவலைக் கமலங்களை
கவனமாகக் கொய்து - அதுதரும்
கண்ணீரையும் பன்னீராக்க கற்றுக்கொள்வோம்  - நம்
வாழ்வென்னும் பூங்கா
என்றும் மாறாத மணம் வீசட்டும் !!

கவனமாய் கற்றுக்கொள்வோம் இதை  - பின்பு
கனிவாய்ப் பெற்றுக்கொள்வோம்
வெற்றி என்னும் சிறந்த விருதை !!!  

No comments:

Post a Comment