Saturday, December 1, 2012

என்ன கணைகளோ இவை?





என்ன கணைகளோ இவை?

கண்டதுமே கண்களுக்குள் கடுமையாய் கடிவாளம் போடும்
அலைபாயும் இள நெஞ்சில் ஆழமாக நங்கூரமிடும்
கதிரவனின் அனல்கரம் தொட்டவுடன் சுண்டிவிடும்
பசும்புல் தலைத் தூங்கும் பனித்துளியாய்
பார்வை பட்டவுடன் தெறிக்கும்
உலைகளத்தில் உடைத்தெறியும்
செவ்விரும்புத் துண்டைப் போல்
உயிர்வழியே ஊடுருவும்
ஆலமை பூசிய அழகுப் பாவையின்
காந்த விழி பாய்ச்சும் பார்வைக் கணைகளோ இவை??!!

உலகை உள்ளங்கையில் அடக்கிட
வீறுகொண்ட வேங்கையென போர்கள் பல கண்டு,
உடலோடு உயிர் மாயும் படைகள் பல கொன்று,
திரும்பிய தேசங்கள் பல வென்று,
வெற்றி மாலைகளைத் தன்
திண்ணத் தோள்களில் சுமந்து வரும்
எதற்கும் அஞ்சிடாமல் எதிரியின்
மார்துளைத்து குருதி குடிக்கும்
வீரவேந்தனின் கூர் நஞ்சுக் கணைகளோ இவை??!!

ஆதியும் அந்தமும் அறிய இயலாத
அறிஞராலும் அளவிட முடியாத
பிரமாண்ட பிரபஞ்சத்தின்
இறுகிய ரகசிய முடிச்சுகளை
அவிழ்க்கும் ஆராய்ச்சியில்
விண்ணுக்கு ஏவ
மண் மீது காத்து நிற்கும் அறிவியல் கணைகளோ இவை??!!

வளமுடனே விஞ்சும் வனப்பும்
குளிர்தென்றல் குலவும் சோலைகளும்
செம்பொன்னெனப்  பயிராகும் நிலங்களும்
செழுங்கயல் குதித்தாடும் புனலோடைகளும்
மந்திகள் மகிழ்ந்தாடும் மலையழகும்
திசைகள் யாவும் செல்வம் செழிக்கும்
நன்னிலம் ஆளும் நாடு போற்றும்
புகழ்மாலை சூடும் மன்னனின்
கையேந்திய நீதி கூறும் செங்கோலோ இவை??!!

வானத்தின் கூரைகளில்
வரிசையாய் படிந்திருக்கும்
வெண்நுரை என மிதந்திருக்கும்
நூலாம்படைகளை மண்மீது நின்றே
தூய்மையாக்கத்  துடித்திருக்கும்
துப்புரவுக் குச்சிகளோ இவை???!!!

விரிந்த வானப்பலகையில்
மதி சூழும் கற்பனைகளைக் இழைத்து
கண் கவரும் வண்ணங்களைக் குழைத்து
காலத்தால் கலையாத கவின்மிகு ஓவியங்களை
வாஞ்சையுடன் வரைய விழையும்
மானசீக ஓவியனின் தூரிகைகளோ இவை???!!!

நான் காண்பதெல்லாம் எதுவோ?
நான் கருதியதெல்லாம் என்னவோ?
இக்கணத்தில் இதையெல்லாம்
எனது சிந்தனையில் செதுக்கிய
எண்ணக் கணைகளோ இவை???
என்ன கணைகளோ இவை???  


No comments:

Post a Comment