புத்தகம் ஒரு புனித சாசனம்
புத்தகம் - நான் திறக்கையிலே
புதிதாய்ப் பூக்கும் புது அகம் என்னிலே
தலைக்குனிந்து படித்தேன் உன்னை
தலைநிமிரச் செய்தாய் என்னை
உன்னைக் கையிலெடுத்த விநாடி
என் உள்ளம் ஆனது தெளிவான கண்ணாடி
தாள் பிரித்து கைகளிலே
தலைப்பணிந்து படிக்கையிலே
என் எண்ணத்தின் ஏடுகளையெல்லாம்
சிறகு முளைத்த சிட்டுகளாய்
நித்தம் படபடக்க வைக்கிறாய் - என்
சித்தம் சிறகடிக்க செய்கிறாய் நீ !
என் மூளைகளின் மூலைகளில்
ஈட்டியென முட்டித் துளைக்கும்
ஆயிரமாயிரம் கேள்விக்கணைகளை
அகம் சுமந்து உன் புறம் படிக்கிறேன்
அமுதூட்டும் அன்னையைப் போல
அற்புத விளக்கங்களை அள்ளித் தந்து
வழியனுப்பி வைக்கிறாய் நீ !
தினம் தினம் புதிதாக
முளைக்கின்ற மழைக்காளானைப் போல
புத்தியில் புதிர்களை புகுத்தி - உன்
பால்வண்ணத் தாள்முகம் பார்க்கிறேன்
புதிதாய் மண்மலர்ந்த மழலையின் புன்சிரிப்பைப் போல
புன்னகைத்துப் புரிய வைக்கிறாய் நீ !
பெருங்கடல் விழுந்த வெள்ளி நாணயம் போல
அழகாய் அணிவகுக்கும் உனது வரிகளில் - என்னை
வடிவிழந்தே மறையச் செய்கிறாய்
வரிசையாய்ப் பின்னப்பட்ட வாக்கியப் பொறிகளில்
சிக்கவைத்து சிறைப்படுத்தி வைக்கிறாய் நீ !
மதுரமான சொற்களின் சுவையில்
மதிமயங்கி மெய்மறக்கச் செய்கிறாய்
சொல் உணர்த்தும் பொருள் தேடி -என்னை
சுயம் இழந்து சிலையாக்கிச் செல்கிறாய் நீ !
விரிகடலுக்குள் வான்துளியாய்
கலந்தே போகிறேன் உனக்குள் - நீயோ
கற்பனைக்குள் கற்பனையாய் எங்கோ
பயணிக்க வைத்து மயக்கும்
மூன்றாம் உலகத்தைப் பரிசளிக்கிறாய் எனக்குள்
எல்லையில்லாத தேடல் பசிகளுக்கு
எட்டிய கைக்கனியாய் - படிப்போர்க்கு
நல்விருந்து படைக்கிறாய் - கற்போர்க்கு
அறிவமுதம் அளிக்கிறாய் நீ !
உன்னை அன்போடு அண்டி வருவோர்க்கு
அறியாமைக் களைபிடுங்கி அறிவுபயிர் நடுகிறாய்
வாழ்க்கை வேருக்கு வளம் சேர்க்கவே
உயிரூட்டும் உரம் இடுகிறாய் நீ !
உண்மையான வாசகனுக்கு
வாசிப்பு என்பது சுவாசிப்பு
இறுதிவரை நீளும் உயிர் நேசிப்பு !
கற்றல் என்பது அவன் உயிர்மூச்சு
நிற்றல் வரை தொடரும்
வாழ்க்கை....
இறைவன் எழுதிய உயிர்வாசகம்
இனிதாய்க் கழியும் ஓர் உலகப் பயணம்
அதில் புத்தகம்
வழித்துணையாய் வரும் புத்தொளி அருளும்
நன்னெறி திசைக்காட்டும் ஒரு புனித சாசனம் !
No comments:
Post a Comment