கசப்பதும் இனிப்பதும் ஒன்றே
காலையில் கடுப்பாய் சீரும் சிறுத்தையின் முகம்
மாலையில் மகிழ்வாய் சிறகடிக்கும் சிட்டின் வேகம்
காலையில் கனக்கும் கல்லாய் கடக்கும் யுகம்
மாலையில் சிலிர்க்கும் இறகாய் மிதக்கும் சுகம்
காலையில் செவிஅதிரும் மழைமேக இடியோசை
மாலையில் மனம்குளிரும் மாந்தோப்புக் குயிலோசை
காலையில் அடிநாக்கும் கசக்கும் வேப்பங்காய் குலை
மாலையில் உள்நாக்கும் இனிக்கும் வேர்ப்பலா சுளை
காலையில் நடைமறந்து நகரும் காலை வெண்மேகம்
மாலையில் மடைதிறந்து பொங்கும் கல்அணைவெள்ளம்
காலையில் வீரியமாய்க் கொட்டும் முள்முனைத் தேள்கொடுக்கு
மாலையில் தித்திப்பாய் சுவைக்கும் சீனிசொட்டும் தேன்கரும்பு
காலையில் பெருந்தீனி சுமக்கும் எறும்பென தள்ளாடும் சோகம்
மாலையில் பசுங்காடு சேரும் கூண்டுக்கிளியென பறந்தோடும் சந்தோஷம்
என பயிலும் பிள்ளைகளுக்கு
விதவிதமாய் அனுபவங்களை அள்ளித் தந்து
வழிவழியாய் ஒலித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
ஓயாமல் தினம் காலையும் மாலையும்
ஓங்கியே தன் ஓசை எழுப்பும்
பள்ளிக்கூடத்து மணி !!!
No comments:
Post a Comment