Sunday, December 30, 2012

மனிதன் என்னும் விதை


மனிதன் என்னும் விதை 



மரங்கள்...
மண்ணில் மிகவும் மகத்தானவை
உதிர்ந்தாலும் உன்னதமானவை  - தன்
சந்ததிகளை சாகாது வளர்ப்பவை

மனிதன் என்னும் வளர்ந்த விதை
பழுத்த பின்புதான்  - தன் உயிரை
உதிர்த்த பின்புதான்
பூமியில் புதைக்கப்படுகிறான்

கனி விழுந்த விதைகளும் அப்படியே
ஆனாலும் ஒன்று
மனிதனால் மட்டும் மீண்டும்
முளைத்தெழுவதற்கு முடிவதில்லையே ஏன் ?

இந்த மண்ணுலகில்  மனிதனுக்கு
மரணம் தான் முடிவா? - அவனால்
மறுபடியும் மீண்டெழ முடிந்தால்
மற்றதை எல்லாம் மதிப்பானா?
ஆணவம் கொண்டு அகிலத்தையே அடக்குவானா?
சாவையே சந்திக்காமல் போனால்
சகலத்தையும் காலடியில் போட்டு அழிப்பானா?

மனிதன் என்ன...
பிடி விலக்கும் மரத்தின் கனிகளா?
வாழ்வறுந்த வசந்த முல்லைகளா?
மூச்சறுந்த மண்ணின் மைந்தர்களா?
மூப்பிலே முதிர்ந்து விழ...

விருட்சத்தை தன்னுள்ளே அடக்கமாய் சுமக்கும்
விதைகள் மட்டும் என்ன
வரம் வாங்கி வந்தவைகளா? - இல்லை அவை
எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளா?
பூமியெங்கும் புனிதத்தை விதைத்த தேவனா?
புதைத்தப் பின்னும் புதிதாய்ப் பூமியில் எழ...

விதைகள் என்ன சாவே சந்திக்காத சஞ்சீவிகளா?
இல்லை இறப்பையே அளிக்காத பிணிகளா?
பூர்வ ஜென்மம் அவை செய்த புண்ணியப் பலனா?
பூமித்தாய் கருக்கொள்ளும் கற்பகக் குழந்தைகளா?

விதைகள் மண்ணில் மரணித்த பிறகே
அவைகட்கு மற்றுமொரு ஜனனம் ஆரம்பமாகிறது
மனிதர்களே ! - நீங்களும் நல்ல
விதைகளாய் மாறுங்கள் - நீங்கள்
மண்ணிலிருந்து மறைந்தாலும் மிஞ்சியுள்ள
மக்களின் மனங்களில் மலருவீர்கள் - என்றும்
மணம் மாறாத மலர்களாக !!!       

No comments:

Post a Comment