அன்புத்தோழிக்கு ஒரு அஞ்சல்
என் அன்புத் தோழியே !
நம் நட்புச்சுடர் ஒளிர்தல் வேண்டும் இவ்வாறு
பசிக்கு உணவாய்
பகையில் துணையாய்
பாசத்தைப் பகிரும் பசுங்கன்றாய்
உயிரில் உறையும் உணர்வுகளாய்
தீங்கனி தேன்சுவை நினைவுகளாய்
மனக்கிடங்கில் சேமித்த முத்துமணிக்கதிர்களாய்
எண்ணச்சித்திரங்களின் வண்ணத்தூரிகையாய்
அலையெழும்பும் ஆனந்தக்கடலின் ஆர்ப்பரிப்பாய்
நெஞ்சோடு நிறையும் கொஞ்சும் நல்இசையாய்
பொன்வானம் தீண்டும் மாலை வெண்மேகமாய்
பொங்கும் பூமுகத்தின் புன்சிரிப்பாய் இருந்திடல் வேண்டும்
செந்தேன் சுமக்கும் பூச்சரமாய் மனதில் மலர்ந்திடல் வேண்டும்
நாளும் நம்பிக்கையோடு கிழக்கிலே முகம் காட்டும்
காலைக் கதிரவனாய் இதயத்தில் உதித்திடல் வேண்டும்
என்றும்...
உன் நட்பென்னும் மழையில் நனைந்திடும் இளநாற்றாய்
நான் உள்ளச்சேற்றில் இருந்திடல் வேண்டும்
உன் நெஞ்சமென்னும் அஞ்சலகத்தில் முகவரி அறியாத மடலாய்
நான் காலம் முழுக்கக் கழித்திட வேண்டும்
நூற்றாண்டுகள் பல கடந்தோடியும்
காலவெள்ளத்தில் கலையாத தமிழ் கற்கோயில் சிற்பமாய்
உன் உள்ளக்கோவில் வீற்றிருக்க வேண்டும்
திகழும் நல்ல நட்புடன்
திரளும் நல்ல நினைவுகளுடன்
நாள்தோறும் உன் நலம் வேண்டி நினைக்கிறேன்
நித்தம் என்னை நினைக்க மறந்தாலும்
என்றும் என்னை மறக்க நினைக்காதே
என் அன்பிற்கினிய தோழியே...
No comments:
Post a Comment