Tuesday, December 25, 2012

பிணமானப் பின்னும் பரிசளிக்கிறது


பிணமானப் பின்னும் பரிசளிக்கிறது 





 
பலகாலம் அரும்பாடுபட்டு
சிறுகச் சிறுகச் சேர்த்து
பார்த்துப் பார்த்து செதுக்கிய
கனமான கனவுக் கோட்டை
சிட்டிகைப் பொழுதில்
நொறுங்கிக் கிடக்கிறது

பலநாட்கள் பலபூக்கள்
முகவரி நாடி மடலாகப் பயணித்து
சலிக்காமல் சிறகு வலிக்க
ஓயாமல் தேடித் தேடி
தேயாமல் உழைத்துக் கட்டிய
தேனீயின் தித்திக்கும் தேன்கூடு
தூள்தூளாகிக் கிடக்கிறது

சிறுகால்கள் ஓடி ஓடி
வரிசையிலே வேகமாய் வரிந்துக் கட்டி
ஊறுகின்ற ரயிலேனவே விரைந்தோடி
தாங்காத பாரமாய்த் தன் தோள்களிலே சுமந்து
தினம் மண்புற்றில் சேகரித்து வைத்த
சிற்றெறும்பின் சிறுஉணவு
சிதைந்துப் போய் கிடக்கிறது

கூர்நகங்கள் கால்கள் கொண்ட
கருங்காக்கைக் கூட்டமொன்று
கொடுமையாய் மனம் வெறுத்து
கொடூரமாய் கொத்திக் கொண்டு
கனலாய்த் தகிக்கும் கடும்பாறை மேட்டில்
கவலையின்றி வீசிப் பறந்த
கோடையிலும் தன் தேன்குரல் தேய
கவிபாடும் பூங்குயிலின் முட்டையைப் போல
கலைந்தழிந்துக் கிடக்கிறது

உள்ளமெல்லாம் ஆசைகளை அடைத்து
கைத்தொடும் போதெல்லாம் உளமார மகிழ்ந்து
குலுங்கி குலுங்கித் தானும் சிரித்து - பிறரையும்
குலுக்கி குலுக்கி சிரிக்க வைத்த
புன்னகைக்கும் அழகு பொம்மை
சிதறுண்டுக் கிடக்கிறது

ஓங்கியே தன் மண்டை அடித்து
உருவத்தையே உருக்குலைத்த மனிதனுக்கு
அதுவரையில் பொறுமையாய் சேர்த்து வைத்திருந்த
பொக்கிஷமாய்த் தன் கருவில் சுமந்து கொண்டிருந்த
சில்லறைப் பிள்ளைகளை
சீக்கிரமாய்ப் பிரசவித்து விட்டு
தன்னை உடைத்த உள்ளத்திற்கு
உவகைச் செல்வங்களை ஈந்து விட்டு
மண் விழுந்து கண் மூடிக் கிடக்கிறது
பிணமானப் பின்னும் பரிசளிக்கிறது

சில்லு சில்லுகளாய் சிதறிப் போன
உடல் உடைந்த ஊமை உண்டியல் !!!  
 
  

No comments:

Post a Comment