வெள்ளைப் பூனைகளும், கருப்பு எலிகளும்
கதை சொல்கிறேன் கேளுங்கள் நண்பர்களே !
முன் குறிப்பு : இக்கதையில் வரும் பெயர்களும், பாத்திரங்களும், சம்பவங்களும், என்றும், யாரையும், எதையும் தனிப்பட்ட முறையில் சார்ந்தவை அல்ல; புண்படுத்தும் நோக்கத்துடன் புனையப்பட்டதல்ல என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு பொதுக் கதை மட்டுமே !!!
தலைப்பு : வெள்ளைப் பூனைகளும், கருப்பு எலிகளும்...
தேனூறும் சோலைகளோடும் பாலோடும் தெளிந்த
செவ்விளநீர் நதிகள் கரை புரண்டோடும்
பழம் பெரும் புகழ் தேசம் ஒன்று
ஓங்கியே பாரினில் இருந்ததுவாம்...
அங்கே வளங்கள் கொழிக்கும்; நிலங்கள் செழிக்கும்
நெடிதுயர்ந்த காட்டு மரங்கள் வளப்புடனே செம்மாந்து நிற்கும்
வயல்வெளிகள் பொன்நெல்லை தாளாது சுமக்கும்
பொன்னும் வைரமும் பூமியின் நிலவறையில் பதுங்கிக் கிடக்கும்
வாசனைப் பொருட்கள் வனமெங்கும் வாசம் வீசி மணக்கும்
இல்லாத செல்வம் இங்கு ஏதுமில்லை என்று
மற்ற தேசங்கள் அதைக் கண்டு வியக்கும்
சமயத்தாலும் சடங்குகளாலும் சாதியாலும்
சிக்குண்டு சிதறிப் போய் இருப்பினும்
இனத்தாலும் குலத்தாலும் பழக்கத்தாலும்
தனித்தனியாய்ப் பிரிந்திருப்பினும்
செம்மண் சேற்றில் கலந்து விட்ட நன்னீரைப் போல
பூசல்களின்றிப் புவியிலே பூத்திருந்த புண்ணிய பூமியாம் அது...
காலம் காலமாய் கதைகள் பலநூறு
இத்தேசத்தைப் பற்றி உலகமெல்லாம் பறந்து
பற்றிப் பரவும் காட்டுத்தீ போல பரவிக் கிடந்தது
உலகின் மக்கள் யாவரும் தன் வாழ்வில்
ஒருமுறையேனும் இத்தேசம் கால் தொட்டு வர
கனவு கண்டு இமை மூடாது காத்திருந்தனர்
என்று காலம் கிட்டும் என்று எதிர்பார்த்திருந்தனர்
கடுமையாய் சூறாவளி வீசினாலும்
பொங்கி எழுந்து கடல்புனல் கொந்தளித்தாலும்
தளராத முயற்சி மனதில் கொண்டு
திசைமாறிப் போனாலும் தரைதொட்டே தீருவோம்
நிச்சயமாய் அந்த கனவுத் தேசத்தை
கண்டுபிடித்தே கரை சேர்வோம் என்று
பாய்மரக் கப்பலேறி பாரெங்கும் பயணப்பட்டனர் மக்கள்
இத்தேசம் பிறந்து அயல்தேசம் செல்பவனை
அத்தேசம் வாழ வைக்கிறதோ இல்லையோ
அயல்தேசம் பிறந்து வலசைப் போகும் பறவையாய்
இத்தேசம் வந்து வாழ்கின்ற அயலானுக்கோ
பண்புடனே பாசத்தோடு பாய் விரித்து
பச்சைத் தலைவாழைக் குருத்து இலை போட்டு
அறுசுவை அமுதம் அளித்து விருந்து படைத்து
எந்த குறையுமின்றி வளமாய் வாழ வைக்கும் இத்தேசம்
அப்படி நெடுங்காலம் முன்னர்
இத்தேசம் அடைந்தே தூங்குவோம்
கண்டுபிடித்தே திரும்புவோம் என்று உறுதியாய் நெஞ்சிலே
கடுமையாய் கங்கணம் கட்டிக் கொண்டு
சில வெள்ளைப் பூனைகள் கப்பலேறி வந்தன
பக்குமாய் என்னென்ன கிடைக்கிறது என்று
விசாரித்து போக விலாசம் தேடி வந்ததாக
விவரம் தெரிவித்து கொஞ்சம் கொஞ்சமாக
வசதியாக வந்து அந்த தேசத்தில் குடியேறிக்கொண்டன
வெள்ளைப் பூனைகள் அதிகார சாட்டையைக் கையிலெடுத்து
பலமான ஆயுதங்களைக் கரம் பற்றி
அங்கே வழிவழியாய் வசித்துவந்த
கருப்பு எலிகளை இரக்கமின்றித் தாக்கின
ஒன்றாய்க் கூடியிருந்த அக்கருப்பு எலிகளை
பிரித்து கூட்டங்கூட்டமாகக் கூறு போடத் தொடங்கின
கைகட்டி வாய்மூடி தருவதையெல்லாம்
விதியே என்று வாங்கிக்கொண்டு
வாயின் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு
வாயிருந்தும் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு
உயிரையும் , உரிமைகளையும் உறிப்பானையைப் போல்
அடக்குமுறைத்தடியால் ஓங்கியே உடைக்கப்பட்டு
அடிமாடாக ஆயுளுக்கும் அல்லல்பட்டு கிடந்தன
அந்த கருப்பு எலிகள் வெள்ளைப் பூனைகளிடம்
இழந்த உரிமையை மீட்டெடுக்கவும்
இன்னல்களை உடைத்தெறியவும்
வீறு கொண்ட வேங்கைகளாக
கருப்பு எலிகள் யாவும் ஒன்று திரண்டு
அரைசதக் காலமாய் போராட்டம் செய்தன
அடி மேல் அடி அடித்து நகராத
சர்வாதிகார அம்மியையும் சுலபமாக
அஹிம்சை உளி கொண்டு தட்டித் தட்டி
பூட்டியிருந்த அடிமை விலங்குகளை
உடைத்தெறிந்து காட்டின...
சுதந்திரக் காற்றை சுவாசித்தப் பின்னே
கருப்பு எலிகள் சுயராஜ்ஜியத்துடன் சந்தோசம் கொண்டன
சுயநலம் இழந்து தேசத்தின் பொதுநலனுக்காக
போராடிய அந்த எலிகள் இப்போது
சுயநலம் ஒன்றையே சுயமரியாதை என்று எண்ணி
தங்களது சிந்தையில் சுயநலம் மட்டுமே சுமக்கத் தொடங்கின...
தன் தேசத்தின் விடுதலைக்காக முழு மூச்சாய்
சாதி, மதம், இனம், சேர்க்கை, குலம், மொழி என்ற
வேற்றுமைகளை அடிவேரறுத்து
பேதங்களைக் களைந்து ஒன்றாய்க் கைகோர்த்து
போராடிய கருப்பு எலிகள் இன்று அவை அனைத்தையும்
இன்று வேருக்கு நீருற்றி விருட்சமாக வளர்த்து வருகின்றன...
ஒரு இனக் கருப்பு எலி மற்றொன்ற ஏளனமாய் நோக்கி
இது வேறு இனமோ என்று வெறியோடு
வெறித்துப் பார்த்து வேற்றுமைப்படுத்தி வெறுக்கத் தொடங்கின...
புண்ணிய அந்த பூமியில் இன்று
பல்வேறு பிரச்சனைகள் பூதாகரமாக
பூமி பிளந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன
அனைத்து கருப்பு எலிகளுக்கும் பொதுவாக விளங்கும்
நிலம், நீர், காற்று, மண், காடு, நதி ஆகியவற்றை
சதி செய்து சொந்தம் கொண்டு வாழ்ந்து வரும்
சீர்மிகு தேசத்தின் தலைவிதியை தங்களது
தனிப்பட்ட விருப்பங்களின் படி முடிவெடுத்து
மாற்றியமைக்கத் துடிக்கின்றன அந்த கருப்பு எலிகள்
தேசத்தின் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து
பஞ்சாயத்து பேசும் நாட்டாமை எலிகள்
தினந்தோறும் வகைவகையாய் ஊர்சொத்தில்
தின்று கொழுத்தன; அனைத்திலும் சுயலாபம் வாங்கி
செழுமையாய் வசதிகள் செய்து கொண்டு சல்லாபம் செய்தன
தன்னைப் பெற்றெடுத்த தாய்தேசத்தை தடயமின்றி
இருட்டறையில் விலைபேசி கூறுபோடத் தொடங்கின
எந்த ஒரு கொடுந் தீங்கையும் பாரபட்சம் பார்க்காது
மிக சௌகர்யமாய் செய்து தேசத்தை சிதைத்தன
உல்லாச ஊஞ்சல்களைக் கூரையில் கட்டிக் கொண்டு
ஆடாத ஆட்டம் போட்டு தறிகெட்டுத் திரிகின்றன
அந்த நிறமும், உள்மனமும் கருத்த எலிகள்
அன்று இந்த திவ்விய தேசத்தை
வெள்ளைப் பூனைகள் கள்ளமாய்
கைக்கொள்ளா அணை வெள்ளமாய்க் கொள்ளையடித்து சென்றன
கருப்புப் பொருட்களை எல்லாம் கருப்பு எலிகளிடமிருந்து
ஆனால் இன்று அந்த எலிகள் தங்கள் தேசத்தையே
ஊரை அடித்து உலையில் போட்டு
சோறு பொங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன
எதிர்காலத்திற்கும் வரப்போகும் சந்ததிக்கும்
கதிர்கதிராய் பொருள் சேர்த்து குவிக்கத் தொடங்கின
இங்கே பதுக்கி வைத்தால் தெரிந்துவிடும் என்று
தூரத்து தேசத்திற்கு அவற்றை இரகசியமாய் தூக்கி எரிகின்றன
அயல் மண்ணிற்கு சென்றால் மட்டும்
கருப்புச் செல்வங்கள் வெள்ளையாகி விடுமா ?
அந்த கருப்பு எலிகளின் கணக்குகள் தப்புமா ?
இங்கே ஆய்வு ஒன்றை நடத்தலாமா சொல்லுங்கள்...
இந்த தேசத்தை அதிகமாய்க் கொள்ளையடித்தது யார் என்று ?
அடக்குமுறையை அகிலம் முழுவதும்
அரளி விதைகளாய்த் தூவி தன் குடையின் கீழே
அனைத்தையும் அடக்கி ஆள முயன்ற வெள்ளைப் பூனைகளும்
அமைதியாய் தலைக்கு மேலே தன் கைகளை உயர்த்தி
காட்டிச் சொல்லுமோ அதிகம் நாங்கள் இல்லைஎன்று...
அந்த தேசம் இன்று உடைப்பட்ட கண்ணாடிக் குடுவையாய்
சிதறுண்டுக் கிடக்கிறது ; எலிகளிடம் சிறைப்பட்டுச் சிதைகிறது
கருப்பு எலிகள் இருப்பதையெல்லாம் சுரண்டிக்கொண்டு
கிடைப்பதையெல்லாம் சுருட்டிக் கொண்டு
எதற்குமே கவலைப்படாமல் கும்மாளமாய்க்
கொக்கரித்து கொட்டமடித்து வருகின்றன
சமயம் பார்த்து மீண்டும் எலிகளின் தேசம் நுழைய
நோட்டமிட்டு நல்ல நேரம் பார்க்கின்றன
மீண்டும் அடிமைப்படுத்த முடியுமா என்று
கைவிலங்கோடு காத்திருக்கின்றன வெள்ளைப் பூனைகள்
கைவிலங்கைப் பூட்டிக்கொள்ள தானாகவே
தங்களது கைகள் நீட்டுமா கருப்பு எலிகள் ?
இனி மீண்டெழவே முடியாதபடி மண் அமிழ்த்தி
கடைசி கருப்பு எலியின் உயிர் மூச்சு பிரியும் வரை
அறுத்துப் போட நல்ல ஆயுதம் தேடுகிறதா
அந்த வெள்ளைப் பூனைகள் ?
தங்கள் தேசம் மீட்க கருப்பு எலிகள் விழித்துக் கொள்ளுமா ?
காலமெல்லாம் அடிமைப்பட்டு கிழிந்துப் போய் கிடைக்குமா ?
வரப்போகும் வஞ்சனைகளை விரட்டியடித்து
உயிர் பிழைத்துக் கொள்ளுமா ?
காலம் என்னும் கவிஞன் தான் விடை எழுத வேண்டும்.
பின்குறிப்பு : இக்கதை புரிந்தால் தயவு செய்து "COMMENT" கொடுங்கள்.
No comments:
Post a Comment