மரபு மா(மீ )றுகிறான் மனிதன்
ஆலமரக்கிளிகளாய் ஆனந்தமாக
உறவுகளோடு கூடி வாழ்ந்த
பாசக்கூடுகளைப் பீய்த்தெறிந்துப் போட்டு -
மனிதன்
அடுக்கடுக்காய் அண்ணாந்து நிற்கும்
கான்கிரீட் காடுகளில்
கூட்டுப்புழுவாகக் குடியேறிக் கொள்கிறான்
கல்விநூல்கள் ஆயிரம் கையிலெடுத்து
கசந்தாலும் அவற்றைக் கசாயமாகக் கரைத்துக் குடித்து
பெயருக்குப் பின்னே பட்டங்கள்
பலநூறு வாங்கிக் கொண்டு -
மனிதன்
எதையும் பிரித்தறியத் தெரியாமல்
எளிதில் முடிவெடுக்க முடியாமல்
பொன்னான பகுத்தறிவை
இலவசமாகவே விற்றுவிடுகிறான்
அறிவியலின் சிகரம் தொட்டு
இலட்சம் ஆராய்ச்சிகளின் உச்சம் கண்டு
அற்புதமாய் உயிரைக் காக்கும்
அருமருந்துகள் கண்டுபிடித்து விட்டு -
மனிதன்
தீயதை விரும்பித் தீண்டி
நோய்களை விரைவில் நாடி
ஆயுள் குறைந்து அழிவைத் தேடி
பாழ்பட்ட பயிரெனவே பிணமாகிப் போகிறான்
சம்மணமிட்டு அமர்ந்து
சுவையாக சாப்பிடும்
சத்தான உணவுகளை
சீயெனவே ஒதுக்கிவிட்டு -
மனிதன்
நச்சானப் பண்டங்களை
நாகரீகமாய் நாற்காலி போட்டு
தீவிரமாய்த் தின்று கொண்டு - தளும்பும்
தண்ணீர்க்குடமாய்த் தொந்தி வளர்த்துத் திரிகிறான்
அரம் போன்ற அறிவு பெற்றும்
வளம்குன்றா வசதி வாய்த்தும்
புகழ்மாலை சூடி முன்னேறிய போதிலும் -
மனிதன்
வாழ்வதற்கு விதிகளை
வரிசையாக வகுத்துக் கொண்டு
தனக்கானத் தீர்ப்புகளைத்
தன்கைப்படவே எழுதிக்கொண்டு
விவாகரத்து விரிசல் வேண்டி
நீதிமன்ற வாசலை விரைவாக நாடுகிறான்
பொன்னானப் பெற்றோரையும்
கனிவான சுற்றோரையும்
தாமரைஇலைத் தவழும் தண்ணீரைப் போல
ஒட்டியே இருந்தாலும் வெட்டிவிட்டு -
மனிதன்
அறியாத உறவுகளின் அறிமுகம் தேடி
இணையக் கோவிலின் வாசலில்
ஒற்றைக்கால் நிற்கும் ஓடைக்கொக்காய்
வரம் வேண்டித் தவம் கிடக்கிறான்
மிதமிஞ்சிய ஆசை மாளிகைக்கு
ஆடம்பர திவ்விய தேசத்திற்கு
விசாலமாக வழிதிறந்து வைக்கும்
அளவில்லாத பணம் தேடும் -
மனிதன்
வாழ்க்கை என்னும் வசந்த வீட்டில்
நிம்மதியை முழுமையாகத் தொலைத்துவிட்டு
நிற்கதியாய் நிலைக்குலைந்து நிற்கிறான்
இருண்ட வான்மேடையில்
ஒய்யார நடைப்போட்டு உலவும்
சிங்கார உலக அழகியாய்
முகம் கருத்த அந்திப்பெண்
அதுவரை அள்ளி முடித்திருந்த தன்
கார்குழலைக் கட்டவிழ்க்கும் பொழுதிலே - அவள்
முன்நெற்றி ஒட்டிவைத்த ஒற்றை வெண்பொட்டாய்
அகன்ற அண்டச் சாளரத்தில்
எழிலுடனே எட்டிப் பார்த்து
அழகுமுகம் காட்டிச் சிரிக்கும்
வெண்ணிலவின் வன்பரப்பில்
வெற்றிச் சாதனைக் கால்தடம் பதித்த -
மனிதன்
தன்னோடு அடுத்த வீட்டில் அண்டி வாழும்
அயலானிடத்தில் அன்பின் தடம் பதிக்க
தொடுவானத் தூரம் பயணிக்கிறான் - ஏனோ
அவனை அந்நியக் கோள்வாசியைப் போல
விசித்திரமாய்க் கண்டு வியக்கிறான்
நிலங்களின் நீளங்கள் குறைந்து
நாடுகளின் எல்லைகள் மறைந்து
உலகச் சந்தைகள் உருமாறி
உள்ளூர் மந்தைகள் வரை உள்ளே நுழைகின்ற
உலகமே கிராமமாகும் விந்தையில் -
மனிதன்
தன் சிந்தையில் தன்னந்தனியாய்த் திட்டமிட்டு
தனித்தன்மையாய்த் தனிநகரம் நிர்மாணித்து
தனக்கென ஓர் தனி உலகை
தனக்குள்ளே தோற்றுவித்து கொள்கிறான்
பிரம்மனிடம் பயிற்சி பெற்று
சோதனைமுயற்சிகளில் வெற்றி சுவைத்து
மரபுகளை மாற்றியமைத்து
செயற்கையாக உயிர்களை உருவாக்கிய -
மனிதன்
இயற்கையின் இயல்புகளை
இரும்புத்திரையிட்டு இறுக்கி
மரபு மாற வைக்கிறான்
மண்மீது மூச்சுவிடும் உயிர்களின் வாழ்வை
வரம்பு மீறச் செய்கிறான்
செயற்கை - தன்னுடைய
கடின இயந்திரகரங்களைக் கொண்டு
பூமிபந்தின் அச்சை அசுரமாக சுழற்றினாலும்
படைப்பின் சூத்திரத்தை சூட்சமமாக கற்று
உண்மையான மண்ணுயிர்களைப் போல
போலிகள் பல படைத்தாலும் - ஏன்
அரைநொடியில் ஆலமரத்தையே
அபரிவிதமாக வளர்த்தாலும்
இயற்கை - அனைத்தையும் கண்டு
மாறாத தன் மௌனப்புன்னகையை வீசி
பரந்த இப்பாருக்கு படைப்பின் சாரத்தை
உண்மையாய் உணர்த்திக் கொண்டு
தனித்துவமான தத்துவத்தை
பொன்போல் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு
அன்புக்கரங்களில் இந்த அகிலத்தை அணைத்து
அமைதியாய் ஆட்சி செய்கிறது
செயற்கை - மனிதனால் பின்னப்பட்ட வலை - சிக்கலானது !
இயற்கை - உலகை இயக்கும் உன்னத கலை - இயல்பானது !
மரபு மீறும் மனிதனின் செய்கை -
சிரிக்கும் மலரை கொடுவாள் கொண்டு சிதைக்கும் நிலை -
மிகக் கொடூரமானது !